Tuesday, April 21, 2009

ஜே.வி.பி. - தே.சு.மு. ஹோமகமவில் வீதிச் சண்டை: பலர் காயம், விமல் மீதும் தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009] ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கும் அதில் இருந்து பிரிந்து சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியாக ஹோமகமவில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது நான்கு பேர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டடுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த மோதல் காரணமாக ஹோமகம பகுதி போர்க்களமாகக் காணப்பட்டது. பரபரப்பான ஹோமகம நகரில் வழமையான நடவடிக்கைகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மோதலைத் தணிக்க காவல்துறையினருக்கு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகச் சென்றது. இங்குள்ள மஞ்சி பிஸ்கட் தொழிற்சாலைக்கு அருகில் தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவது உட்பட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே அப்பகுதிக்கு இலக்கத்தகடு அற்ற பார ஊர்தி ஒன்றில் திடீரென வந்த ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலக்கத் தகடு இல்லாத சந்தேகத்துக்கிடமான பார ஊர்தி ஒன்று தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ஜே.வி.பி.யினர் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அந்தப் பகுதிக்கு தனது பஜிரோ ரக ஊர்தியில் வந்தபோது மோதல் மேலும் தீவிரமடைந்தது. விமலின் வாகனத்தைச் சுற்றிவளைத்துக்கொண்ட ஜே.வி.பி. ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதலை நடத்துவதற்கு முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் விமலின் அரச தலைவர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விமலை மீட்டுச் சென்றனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினர், அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமது கட்சி ஆதரவாளர் ஒருவர் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போதே இலக்கத்தகடு இல்லாத பார ஊர்தியில் வந்திறங்கிய தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் ஜே.வி.பி.யினர் மீது திடீர்த் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தயாராக நின்ற ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களும் கடுமையான பதில் தாக்குதலை உடனடியாகவே தொடங்கினர். இதனால் ஹோமகம பகுதி போர்க் களமாகக் காட்சியளித்தது. இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் வேறு வாகனங்களில் அந்தப் பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். காவல்துறையினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்தபோதிலும் அவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. காவல்துறையினர் பார்த்துக்கொண்டிருக்கவே இந்த மோதல்கள் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது. இதில் படுகாயமடைந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பையும் சேர்ந்த பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.