Tuesday, April 21, 2009

வன்னியில் இருந்து நேற்று வவுனியா வந்த 5,000 பேர் ஓமந்தையில் தங்கவைப்பு

[செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009] வன்னியில் போர் இடம்பெறும் பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 5 ஆயிரம் பேர் நேற்று திங்கட்கிழமை வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஓமந்தைப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. ஓமந்தைப் பகுதியில் உள்ள பன்குளம் மற்றும் தாண்டிக்குளம் பகுதி பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்ட இவர்களைச் சந்திப்பதற்கு வெளியாட்கள் எவரும் அனுமதிக்கப்படாத அதேவேளையில் இவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று அதிகாலையில் புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை போன்ற பகுதியில் இராணுவத்தினர் பெரும் எடுப்பிலான தாக்குதலை நடத்தியதையடுத்து சந்திக்கடலைத் தாண்டி புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதிக்கு வந்த இவர்கள் படையினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பேருந்து ஊர்திகளில் ஏற்றப்பட்டு ஓமந்தைக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களாகக் காணப்பட்டனர். நேற்றைய நாள் மேலும் 20 ஆயிரம் பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் நேற்று இரவு வரையில் 5 ஆயிரம் பேர் மட்டுமே வவுனியாவுக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரமாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 75 வீதமானவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். வவுனியா செட்டிகுளம் பகுதியில் நான்கு நிவாரண கிராமங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் இரண்டு கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.