Tuesday, April 21, 2009

வவுனியாவில் பிரபல மருத்துவர் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009] வவுனியாவின் பிரபல மகப்பேற்று மருத்துவரான மீரா மொகைதீன் (வயது 50) நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியா கற்குழியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வாயிலில் நேற்று திங்கட்கிழமை இரவு 7:00 மணியளவில் இவர் சுடப்பட்டதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. கற்குழியில் உள்ள மேற்படி தனியார் மருத்துவமனைக்கு தனிப்பட்ட மருத்துவச் சேவைக்குச் சென்றிருந்த அவர், அதனை முடித்துக்கொண்டு அங்கிருந்து வவுனியாவுக்குப் புறப்பட்டபோதே மருத்துவமனை வாயிலில் வைத்துச் சுடப்பட்டார். மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் உடனடியாக வவுனியா பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் உடனடியாகவே அவருக்கு சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சைகள் பலனின்றி இரவு 8:00 மணியளவில் அவர் மரணமானார். வவுனியா பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்ட பெரும் தொகையான கர்ப்பிணித் தாய்மாருக்கு இவர் பெரும் சேவையாற்றிவந்திருந்தார். இவரது மரணம் வுவுனியாவில் மகப்பேற்று மருத்துவத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.