[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களில் தம்மைப் பற்றிய விபரங்களை உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு இன்று மீண்டும் அறிவித்திருக்கின்றது. இந்த உத்தரவுக்கு அமைய தம்மைப் பதிவு செய்துகொள்ளாத எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்கள் எனவும் கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை ஒலிபெருக்கி மூலமாக தமிழிலும் சிங்களத்திலும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின்படி தமது பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் தங்கியிருக்க முடியாது எனவும் குடியிருப்பாளர்கள் அனைவரும் அருகேயுள்ள காவல்துறை நிலையத்தின் மூலமாக அல்லது பாதுகாப்பு அமைச்சின் நடமாடும் செயலகத்தின் மூலமாக தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பதிவு செய்துகொள்ளாமல் தமது வீடுகளில் யாரையாவது குடியமர்த்துவதும் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான பாரிய வெள்ளை நிற பேருந்து ஒன்றின் மூலமாகவே இந்த அறிவித்தல் இன்று காலை முதல் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. இந்த வெள்ளை நிற பேருந்துதான் நடமாடும் செயலகமாகவும் செயற்படவிருக்கின்றது. இதன்படி வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தமது வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் ஒவ்வொருவர் பற்றிய முழுமையான விபரங்களையும் காவல்துறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வீட்டு உரிமையாளர்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமான முறையில் வைத்திருக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் சேவையின் மூலமாகவும் இணையத்தளத்தின் மூலமாக சுயமாகவும் தம்மைப் பற்றிய விபரங்களை குடியிருப்பாளர்கள் பதிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை ஏற்கனவே பதிந்து கொண்டவர்களும் புதிதாகப் பதிந்துகொள்ள வேண்டியுள்ளவர்களும் நாளை மறுநாள் வெள்ளவத்தை பாமன்கடை பகுதியில் நடைபெறும் நடமாடும் செயலகத்தின் மூலமாக தமது பதிவை மேற்கொள்ள அல்லது புதுப்பித்துக்கொள்ள முடியும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.