Friday, April 17, 2009

மகிந்தவுடன் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி நம்பியார் ஆலோசனை

[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] வன்னிப் பகுதியில் தொடரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான விஜய் நம்பியார் இன்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வன்னி நிலைமைகள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம அதிகாரியான நம்பியார், இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை கொழும்பை சென்றடைந்தார். நேற்று கொழும்பு சென்றடைந்த உடனடியாகவே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்து விரிவான பேச்சுக்களை அவர் நடத்தியிருந்தார். இன்று காலை மகிந்த ராஜபக்சவுடன் அவர் நடத்திய பேச்சுக்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான முறையில் வந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குடியேறினால் அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவுவது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நம்பியாருடன், ஐ.நா. அரசியல் விவகாரத் திணைக்களத்தைச் சேர்ந்த ஹிட்டோக்கி டென்னும் உடன் சென்றிருக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.