[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு தன்னுடைய சிறப்புப் பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானிய அனுப்பிவைத்துள்ள அதேவேளையில், இவ்வாறு அனுப்புவதற்கு பிரித்தானியாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சிறிலங்கா பிரித்தானியாவைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. வன்னியில் போர் தீவிரமடைந்து பாரிய மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகியிருக்கும் நிலையில், இலங்கையில் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதை நோக்கிய தனது சிறப்புப் பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதத்தில் நியமித்தது. இருந்த போதிலும் இந்த நியமனத்தை சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. கொழும்பின் நிராகரிப்பை பிரித்தானியா கடுமையாக விமர்சித்ததையடுத்து, டெஸ் பிறவுண் நியமன விவகாரம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஒன்றையையும் ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதிலும் இந்த நியமனம் தொடர்பில் தம்முடன் உரிய முறையில் கலந்தாலோசிக்கவில்லை என கொழும்பு தெரிவித்து வந்தது. இந்தப் பின்னணியிலேயே ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வன்னிப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக டெஸ் பிறவுணை தமது பிரதிநிதியாக பிரித்தானிய அரசு அவசரமாக நேற்று சனிக்கிழமை நியூயோர்க் அனுப்பிவைத்திருக்கின்றது. இது தொடர்பாக இன்று கொழும்பில் ஊடகவியலாளர்ளிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, இவ்வாறு தமது பிரதிநிதி ஒருவரை அனுப்பிவைப்பதற்கு பிரித்தானியாவுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றார். "சிறிலங்கா இப்போது பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இல்லை" எனவும் குறிப்பிட்ட கேகலிய ரம்புக்வெல, பிரித்தானிய ஐ.நா.வுக்கு அனுப்பிவைத்துள்ள பிரதிநிதியை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளையில், வன்னியில் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோசமடைந்து வரும் போர் தொடர்பாக தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேவிட் மிலிபான்ட், இது தொடர்பாக விவாதிப்பதற்காகவே தமது சிறப்புப் பிரதிநிதியை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்தார். வன்னியில் தொடரும் போரினால் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்த டேவிட் மிலிபான்ட, அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வகையிலும், பாதுகாப்பான முறையில் அவர்கள் வெளியேறுவதற்கு வசதியாகவும் போர் நிறுத்தம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தான் மீண்டும் முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார். "பிரித்தானியப் பிரதமருடைய சிறப்புப் பிரதிநிதியாக நியூயோர்க் செல்லும் டெஸ் பிறவுண், ஐ.நா. அதிகாரிகளுடன் இந்த நிலைமைகள் தொடர்பாக அவசர ஆலோசனைகளை மேற்கொள்வார்" எனவும் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.