Sunday, April 19, 2009

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நோர்வே உதவி வருகின்றது: அஸ்கிரிய மகாநாயக்க தேரர் குற்றச்சாட்டு

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே உதவி வருவதாக சிறிலங்காவின் செல்வாக்குமிக்க பெளத்த மதத் தலைவர்களில் ஒருவரான அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் கடுமையாக குற்றம் சாட்டியிருக்கின்றார். நோர்வே, கென்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சிறிலங்காவின் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து உரையாடியபோதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். கண்டியில் உள்ள அஸ்கிரிய பீடத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்ற புதிய தூதுவர்கள் மகாநாயக்கரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், தற்போதைய அரசியல் மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். சிறிலங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்களை நோர்வே நடத்திக்கொண்டிருந்த அதேவேளையில், மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதில் கவனத்தைச் செலுத்தியது எனவும் மகாநாயக்கர் குறிப்பிட்டார். ஓஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்தைப் பாதுகாப்பதற்கு நோர்வே தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய மகாநாயக்கர், தமது நாடுகளில் உள்ள எமது தூதரகங்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நாடாவது தவறிவிட்டது என்றால் இந்த நாடுகள் எம்முடன் நட்பு நாடுகளாக உள்ளன எனக் கருதமுடியாது எனவும் தெரிவித்தார். ரொட்னி பெரேரா, ஜயந்த திசநாயக்க மற்றும் ஏ.எம்.ஜே.சாதிக் ஆகியோர் முறையே நோர்வே, கென்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.