[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் போரை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் நெருக்குதல்கள் தீவிரமடைந்துவருவது பற்றியும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம விரிவான உரை ஒன்றை நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகக் கட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.09.04) அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் தாக்கிச் சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து நோர்வேக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சிறிலங்காவில் தீவிரமடைந்திருக்கின்றது. அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பன இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்துவதுடன் நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளை சிறிலங்கா முற்றாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளன. "கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுநாளும் முழுமையான பாதுகாப்பை வழங்கி வருகின்றது. ஆனால் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்துக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க நோர்வே தவறிவிட்டது" எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசந்த வர்ணசிங்க, "இது நோர்வேயின் ஆதரவுடன்தான் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது" எனவும் தெரிவித்தார். "இந்த நாட்டில் பயங்கரவாதத்துக்கு நோர்வே ஆதரவளித்து வந்திருக்கின்றது என்பது இப்போது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, "ஓஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்துக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை" எனவும் குற்றம் சாட்டினார். "இந்தக் கட்டத்திலாவது நோர்வேயுடனான உறவுகளை அரசாங்கம் துண்டித்துக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியிருக்கும் விமல் வீரவன்ச, "இல்லை எனில், இதனைச் செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது தேசப்பற்றாளர்களுடைய கடமையாகும்" எனவும் வலியுறுத்தினார். இதேவேளையில் நோர்வேயுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது அவசியமா என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் கேட்டபோது, அவர் அது தவறான ஒரு கோரிக்கை எனத் தெரிவித்தார். "சிறிலங்கா ஏற்கனவே அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில் நோர்வேயுடனான உறவுகளைத் துண்டிப்பதற்கு எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவும் நிலைமைகளை மேலும் மோசமாக்குவதாகவே இருக்கும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார். "அதேவேளையில் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரையில் நோர்வேதான் அதில் அனுசரணையாளராகச் செயற்பட்டது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது" எனவும் குறிப்பிட்ட ஹசன் அலி, பேச்சுக்களின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்தப் பின்னணியிலேயே நோர்வே விவகாரத்திலும், போர் நிறுத்தம் தொடர்பான அனைத்துலக அழுத்தங்கள் தொடர்பாகவும் எவ்வாறான அணுகுமுறையை சிறிலங்கா பின்பற்றவிருக்கின்றது என்பதை நாளை நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் விளக்கிக் கூறவிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.