[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] இலங்கையின் போர்ச்சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளில் பார்த்து, படித்து மனம் கலங்கி வருகின்றோம். மக்கள் செறிந்து வாழும் 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தனது இறுதிக்கட்டத் தாக்குதலை உலக நாடுகளின் கண்டனக்குரல்களை மீறி தொடங்கிவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர். தமிழர்களின் குரல்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி, நடந்துகொண்டிருக்கும் இந்த மனிதப் பேரவலத்திற்கு இந்தியாவே பின்னணியில் இருந்து செயற்படுவதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய செய்தியில் போரில் இலங்கையில் நடக்கும் போரில் இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும், இராணுவ வல்லுநர்களையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும் கண்டனத்தைத் தெரிவிக்கும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.04.09) பிற்பகல் 12:00 மணி முதல் இந்திய தூதரகத்தின் முன் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் உலக மக்களின் கவனங்களை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் உறவுகளுக்காக போராட வேண்டிய மிக அவசியமான காலக்கட்டத்தில் நாமும் இருக்கின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், பெண்கள் என வேறுபாடின்றி கொன்று குவிக்கப்படுவதும், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகாயமடைவதும், காயமடைந்த மக்கள் போதிய மருந்தின்றி, சத்துணவின்றி இறப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரு சிறு இடமும் இன்றி தமிழ் மக்களின் பட்டினி வாழ்வு மனித நேயம் பேசும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நடந்து வருகின்றது. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வரும் கொடுமையை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகிறோம்? காலம் காலமாய் வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடிய ஒரே ஒரு காரணத்திற்காக ஒவ்வொரு நொடியும் ஈழத் தமிழர்கள் படும் தாங்கொணா துன்பங்கள் தொடர்பான செய்திகளைப் பார்க்கும் போது மனம் துடிக்கிறது. தாங்கள் வாழ்ந்த சொந்த மண்ணில் ஓடிப் பதுங்குவதற்குக் கூட பாதுகாப்பான இடமின்றி தமிழ் உறவுகள் படும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியாதது. சொந்த இரத்தம் ஈழத்தில் பெருமளவில் சாகிற இந்த வேளையில் தமிழர்கள் என கூறிக்கொள்ளும் நாம் எதையும் செய்யாமல் விட்டால் வரலாற்றுப் பெரும்பழியை நாம் சுமக்க வேண்டி வரும். ஒருநாள் அவர்களுக்காக விடுமுறை எடுப்போம். பெருந்திரளாக இந்திய தூதரகம் முன் அணித்திரள்வோம். ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் குரல்களைப் பதிவு செய்வோம். அதிரும் கண்டனக் குரல்களால் இந்திய அரசைக் கண்டிப்போம். நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத்தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்? இந்தப் போரை இந்தியாவே பின்னணியில் இருந்து நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்ற வேளையில் இந்தியா அதற்கு சரியான விளக்கம் தராமல் மெளனம் காப்பது ஏன்? தடைசெய்யப்பட்ட நச்சு வாயுக்குண்டுகளை சிறிலங்காவிற்கு வழங்குவது ஏன்? ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணைப் போவது ஏன்? இந்திய நாட்டு வம்சாவளித் தமிழர்களான நமக்கு இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்க எல்லாவித தகுதியும் இருக்கிறது. போரின் துன்பத்தினை தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது தவறாகாது. மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பது தவறாகாது. ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும். இன்றைய நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல் மிகத் தேவையானதாய் இருக்கின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புக்கள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sunday, April 19, 2009
ஈழத் தமிழரின் போரில் இந்திய அரசின் பங்களிப்பை கண்டித்து மலேசியாவில் பேரணி
Sunday, April 19, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.