[செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2009] இலங்கை இனப் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சரவை எத்தனை முறை விவாதித்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு குறித்து அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது வேறு பொருத்தமான இடத்திலோ பாமக கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தற்போது விமர்சிப்பது முறையா என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை பாமக ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பன்னாட்டுச் சட்டத்தின்கீழ் நேரடியாகத் தலையிடுவதற்கான உரிமையும் கடமையும் இந்தியாவுக்கு உள்ளது என பல முறை பாமக வலியுறுத்தி வந்துள்ளது. இக்கருத்தை பிரதமரை நேரில் சந்தித்தபோதும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் பாமக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து இலங்கைத் தமிழர் பிரச்னையை எழுப்பி, இந்தியாவுக்குள்ள சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்ற வேண்டும் என வாதிட்டுள்ளனர். ஆனால் தேர்தலுக்காக இலங்கைப் பிரச்சினையை பாமக கையில் எடுத்துள்ளதாக சிதம்பரம் குற்றம்சாட்டுவது எந்த வகையில் நியாயமாகும்? மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் இருந்த கடந்த 4 ஆண்டு 11 மாதங்களில் இலங்கைப் பிரச்சினை குறித்து எத்தனை முறை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது? அமைச்சரவைக் கூட்டத்துக்கு இப்பிரச்சினை வரவில்லையெனில் இதை விவாதப் பொருளாகக் கொண்டு வருவதற்கான பொறுப்பான அமைச்சகம் எது? சம்பந்தப்பட்ட அமைச்சகம் அதை ஏன் செய்யத் தவறியது? பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு உரிமையும், கடமையும் சட்டத் தகுதியும் இருந்தபோதிலும் அதைப் பயன்படுத்துவது குறித்து எப்போதாவது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? நிதித் துறை மற்றும் உள்துறை பொறுப்பை வகித்துவரும் மூத்த அமைச்சரான ப.சிதம்பரம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா? இலங்கை மீது சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதன் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஆற்றல் இந்தியாவுக்கு இல்லை என்று சிதம்பரம் கூறவில்லையா? அப்படியெனில் இலங்கை விஷயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுத் தோல்வி என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையா? இலங்கைத் தமிழர் விவகாரம், தொலைவில் உள்ள இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் எல்லாம் வாதிட்டு விவாதிக்கப்படும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை பிரதானமாக விவாதிக்காதது ஏன்? மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு பாமக உறுப்பினர்கள் மூலமாக இப்பிரச்னை குறுகிய நேரம் விவாதிக்கப்பட்ட போது சிதம்பரம் எங்கே போயிருந்தார்? இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. அப்பாவி மக்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தல், ராடார் வழங்கியது, வானூர்திகளை வேவுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இவற்றை மத்திய அரசு மறுக்கவில்லை. இதற்கு சிதம்பரம் என்ன பதில் சொல்லப் போகிறார்". இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ராமதாஸ்
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.