Wednesday, April 15, 2009

சுதந்திரமான போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவாய் செயற்பட தயார்: தென்னாசியாவின் அதியுயர் கல்விமான்கள் மகிந்தவுக்கு கடிதம்

[புதன்கிழமை, 15 ஏப்ரல் 2009] இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு சுதந்திரமான பார்வையாளர்கள் குழுவாகச் செயற்படத் தயார் என்று தெற்கு ஆசிய நாடுகளின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர். தென்னாசியாவின் அதியுர் கல்விமான்களான கே.ஜி.கண்ணபிரான் (தேசியத் தலைவர், மக்கள் உரிமைக் கழகம், பியுசிஎல்) ஐதரபாத். நீதிபதி இராஜிந்தர் சச்சார் (முன்னாள் தலைமை நீதிபதி, புதுடில்லி உயர்நீதிமன்றம்) எழுத்தாளர் அருந்ததி ராய் (புதுடில்லி) புஷ்கர் ராஜ் (பொதுச் செயலாளர், பியுசிஎல்) பமீலா பிலிப்போஸ் (வுமன்ஸ் பீச்சர் சர்வீஸ்) சுவாமி அக்னிவேஷ் (புதுடில்லி) பேராசிரியர் அமித் பாதுரி (மதிப்புறு பேராசிரியர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) புதுடில்லி அருட்திரு பி.ஜே.லோறன்ஸ் (பேராயர், தென் இந்திய திருச்சபை, நாந்தியால் மறை மாவட்டம்) பிரபுல் பித்வாய் (கட்டுரையாளர், புதுடில்லி) சுமித் சக்ரவர்த்தி (ஆசிரியர், மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார ஏடு, புதுடில்லி) தபன் போஸ் (புதுடில்லி) றீட்டா மன்சந்தா (மனித உரிமைகளுக்கான தெற்கு ஆசிய அரங்கம் - நேபாளம்) பேராசிரியர் கமல் மித்ர செசனாய் (அனைத்துலக ஆய்வுகள் பள்ளி, தலைவர் ஆசிரியர்கள் சங்கம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி) எர்னஸ்ட் தீன தயாளன் (பெங்களூர்) பிரதீப் பிரபு (சேத்காரி சங்கதனா, தகானு/ மும்பாய்) பிரசாந்த் பூஷன் (வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம், புதுடில்லி) எம்.ஜி.தேவசகாயம் (ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, சென்னை) குமார் முரளீதரன் (பத்திரிகையாளர், புதுடில்லி) அருட்திரு தயானந்த் கார் (மதுரை) ஹென்றி திபேன் (மக்கள் கண்காணிப்பகம், மதுரை) எம்எஸ்எஸ் பாண்டியன் (சென்னை) சுசில் பியாகுரெல் (முன்னாள் ஆணையர், நேபாள மனித உரிமை ஆணையம், காத்மாண்டு) முபாஷிர் ஹசன் (லாகூர், பாகிஸ்தான்) ஆகியோர் உட்பட மற்றும் பலர் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இராஜபக்ச அவர்களுக்கு, சிறிலங்காவின் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிரம் அடைந்துள்ள மோதல் காரணமாக, வன்னிப் பகுதியில் உருவாகி வரும் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்து தொடர்ந்து எங்களின் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தி வருகின்ற, தெற்கு ஆசியாவின் அக்கறை கொண்ட குடிமக்களின் மிகப் பெரிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள், ஏப்ரல் 13, 14 ஆகிய இரு நாட்களுக்கு உங்களால் அறிவிக்கப்பட்ட மனிதநேயப் போர் நிறுத்தத்துக்கு முதலில் எங்களது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மோதல் நிறுத்தப்படுவதை வரவேற்பதாக ஏற்கெனவே கூறியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது நீங்கள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பையும் ஏற்றுக் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். மனித நேயப் போர் நிறுத்தம் என்று உங்களால் அழைக்கப்படுகின்ற இந்தப் போர் நிறுத்தத்தை, மோதலில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், உண்மையில் அவர்கள் மீது கொண்ட அக்கறைதான் இந்தப் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்கும் வெளியே, உதவி தேடிச் செல்லக் கூடிய சுதந்திரமான மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட வேண்டியதும் தேவையாகும். உங்களது படையினர் இதற்கு முன்பு ஆயுத நடவடிக்கைகளை இடை நிறுத்தியபோது, இந்த விடயத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதனால், மோதல் பகுதியில் இருந்து வெளியேறி தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்வதற்கு போர் நிறுத்தம் அனுமதி அளிக்கிறது என்ற நம்பிக்கை அப்போது ஏற்படவில்லை. எனவே இந்த முறை, 1. அப்பாவித் தமிழ் மக்கள் இடையே நம்பிக்கையையும் உறுதியையும் உருவாக்கும் பயனுள்ள முயற்சியாக, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மாற்ற வேண்டும். 2. போர் நிறுத்தத்தை சுதந்திரமாகக் கண்காணிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எந்தத் தரப்பும் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்த முடியாது. மோதல் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேறிச் செல்வதைத் தடுக்க முடியாது. நிலைத்த, நீடித்த அமைதிக்கான வாய்ப்புகளைத் திறந்துவிடும் வகையில் விரும்பத்தக்க பயன்களை ஏற்பட வேண்டும் எனில், உங்களால் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம் நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டியது தேவை என்று, ஐ.நா. பொதுச்செயலரும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரும் கருதுவதைப் போலவே நாங்களும் கருதுகின்றோம். என்றபோதிலும், இலங்கையின் அனைத்துக் குடிமக்களின் அமைதிக்கும், வளவாழ்வுக்கும் அடையாளமாக விளங்கும் சிங்கள, இந்துப் புத்தாண்டை முன்னிட்டு, தற்போது போர் நிறுத்த அறிவிப்பு என்ற முதல் நடவடிக்கையை நீங்கள் எடுத்திருக்கின்றீர்கள். இலங்கைக்கும் எங்களுக்கும் இடையே பல பொதுவான வரலாற்றுப் பிணைப்புகளைக் கொண்டுள்ள தெற்காசியர்கள் ஆகிய நாங்கள், நீங்கள் அறிவித்துள்ளபடி ஒரு மெய்யான மனிதநேய முயற்சியாக மாற்றுவதற்காக, போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு எங்களது ஆற்றல்களை வழங்குவதற்குத் தயார் என்ற எங்களின் விருப்பத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். தெற்கு ஆசிய நாடுகளின் புகழ்பெற்ற மனிதர்களின் பட்டியலைக் மேலே நாங்கள் தந்திருக்கின்றோம். உங்களால் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை ஆதரிப்பவர்கள் இவர்கள். உணவு, மருந்து, சுகாதார வசதிகள், இருப்பிடம், மனிதர்களுக்கான பிற அடிப்படையான வசதிகள் முதலியவற்றுக்காகத் தவியாய்த் தவிக்கின்ற பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள், அந்தக் கடுமையான துன்பச் சோதனையில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் நம்பிக்கையை உருவாக்குவதாகவும், நடைமுறை உண்மையாகவும் போர் நிறுத்தத்தை மாற்றுவதற்கு தங்களது ஆற்றல்களை தரத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். உங்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போர் நிறுத்தத்துக்கு, தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பைச் (சார்க்) சேர்ந்த அனைத்து உறுப்பினர்களிடமும் ஆதரவு கோருவதற்காக, இதன் நகலைத் தெற்காசிய நாடுகளின் அரசு தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பி இருக்கிறோம். உங்களால் அறிவிக்கப்பட்டுள்ள மனிதநேயப் போர் நிறுத்தம் தேவையான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இதன் நகலை தெற்கு ஆசிய ஊடகங்களுக்கும் அனுப்பி இருக்கின்றோம். இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை ஏற்கும் வகையில், நீங்கள் உடனடியாக, ஆக்கபூர்வமான முறையில் பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு எங்கள் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிப்பதற்கும், அந்தப் பொறுப்பை ஏற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் எங்களால் இயலும். இந்த வாய்ப்பு தவறிப் போவதற்கு நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகின்றோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.