Wednesday, April 15, 2009

களுத்துறை சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆறு கைதிகள் இன்று காலை சுட்டுக்கொலை: நால்வர் படுகாயம்

[புதன்கிழமை, 15 ஏப்ரல் 2009] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பலத்த பாதுகாப்புடன் கூடிய களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் ஆறு கைதிகள் இன்று காலை சிறைச்சாலை காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் நான்கு சிறைக் கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகி களுத்துறை சிறைச்சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேவேளையில் தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் ஒரு கைதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 நிமிடத்திற்கும் 4:30 நிமிடத்துக்கும் இடைப்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து, களுத்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக களுத்துறை சிறைச்சாலைக்கு விரைந்தனர். களுத்துறை சிறைச்சாலையின் பாதுகாப்பும் உடனடியாக காவல்துறையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளையில் தப்பிச்செல்லப்பட்ட கைதிகள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் மூத்த அமைச்சர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை சிறைச்சாலையில் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட 350-க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.