[புதன்கிழமை, 11 பெப்ரவரி 2009]
சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது
அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.
சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது.
குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர்.
அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர்.
போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.
இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 11, 2009
பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு
Wednesday, February 11, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.