Wednesday, February 11, 2009

அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப வன்னி மக்கள் பராமரிக்கப்பட வேண்டும்: நோர்ட்டிக் நாடுகள்

[புதன்கிழமை, 11 பெப்ரவரி 2009] வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நோர்ட்டிக் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த ஐந்து வெளிவிவகாரத்துறை அமைச்சர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னி பகுதியில் ஏற்பட்டுள்ள மனித அவலங்கள் ஆழ்ந்த கவலையை தருகின்றன. ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புக்களுடன் அங்கு இரண்டரை லட்சம் மக்கள் போருக்குள் சிக்கியுள்ளனர். சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனிதாபிமான விதிகளை மதிக்க வேண்டும். வன்னி பகுதியில் காயமடைந்தவர்களை அகற்றுவதற்கும், மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்து செல்வதற்கும் தற்காலிகமான ஒரு போர் ஒய்வு தேவை. மனிதாபிமான விதிகளின் முக்கியமான கொள்கைகள் மதிக்கப்பட வேண்டும். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற மனிதாபிமான உதவி நிறுவனங்களின் பணியாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இணைத்தலைமை நாடுகள் கடந்த 3 ஆம் நாள் விடுத்துள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. போரில் ஈடுபடும் தரப்பினர் மக்களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போதைய மோதல்களுக்கு முடிவை காணும் முகமாக பேச்சுக்கள் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.