Thursday, February 12, 2009

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவிருந்த போராட்டம் மாற்றம்

[வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009] இந்திய நாடாளுமன்றம் முன்பாக நாளை நடத்தப்படவிருந்த பேரணி மற்றும் மறியல் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என ஈழத் தமிழர் தோழமைக் குரலின் அமைப்பாளர் பா.செயப்பிரகாசம் தெரிவித்துள்ளார். மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், பெண் விடுதலை அமைப்பினர், ஊடகவியலாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்துள்ள இந்த அமைப்பின் சார்பில் 01.02.09 நடைபெற்ற அமைப்புக் குழு கூட்டத்தில் டெல்லி நாடாளுமன்றத்தின் முன்பாக நாளை பேரணி மற்றும் மறியல் போர் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இப்பேரணி, மறியல் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (17.02.09) மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசே! 1) ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் போருக்குத் துணை செய்யாதே 2) தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு 3) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு 4) கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக சிறிலங்கா அரசின் மீது நடவடிக்கை எடு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடு இக்கோரிக்கைகளை முன்வைத்து டில்லி நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் மறியலில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் விடுதலை இயக்கங்கள், தகவல் தொழில் நுட்பர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினர்களும் "ஈழத்தமிழர் தோழமைக் குரல்" அமைப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுன்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.