Saturday, February 28, 2009

நாள் ஒன்றுக்கு அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் - ஜோன் ஹோம்ஸ்

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009]

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களின் 60 வயதுக்கு கீழ்ப்பட்டோர் சுதந்திரமாக நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பபட்டுள்ளதாக ஐ.நா.மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கான விஜயத்தின் அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள அவல நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்கள் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன. தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர், பலர் காயமடைகின்றனர். எவ்வாறாயினும் யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே பாதிக்கப்படுவதாக தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார் தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரையும், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.