[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009]
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.
இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், அங்கு உணவு, குடிநீர், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போரில் அப்பாவித் தமிழர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதுடில்லியில் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ஆயிரம் உயர்வலு கொண்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றும் போதும் இதே கருத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.
இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையில் சண்டை நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருக்கிறது. ஆயுதங்களைக் கீழே போடுவோம் என்பதை விட இது சிறிய அறிவிப்புதான்.
எனினும் இலங்கையில் போரை நிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாகும்.
எனவே, இலங்கையில் போரை நிறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சிக்கு விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை வழங்க மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள் அடங்கிய குழுவை இந்தியா விரைவில் அனுப்பி வைக்கும்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு தமிழ் மக்கள் வாழும் மாநிலங்களுக்கு சமத்துவம், அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி நான் விடுத்துள்ள இந்தத் தாழ்மையான வேண்டுகோளை சிறிலங்கா அரசும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.