Saturday, February 28, 2009

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009] இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது..உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது. ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. எமது மக்கள் படும் இன்னல்களையும, போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன. எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை. அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கரியத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காளத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம் அன்பார்ந்த தமிழ் மக்களே! ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்! அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்! சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம். „வலிமையே வாழ்வு“ ஒற்றுமையே வலிமை“ -தமிழர் விழிப்பு இயக்கம்- ----------இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது---------

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.