[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009] இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடியில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 185 பேரை காவல்துறையினர் இன்று செய்துள்ளனர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் தூத்துக்குடியில் ஆயிரம் உயர்வலு கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு இன்று சனிக்கிழமை அடிக்கல் நாட்ட வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை திரும்பிப் போக வலியுறுத்தி இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலையில் வைகோ தலைமையில் கூடினர். கறுப்புக்கொடியுடன் வந்திருந்த அவர்கள் விழா நடைபெறும் ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்தனர். ஊர்வலம் புறப்படும் முன்னர் வைகோ உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொலை செய்கின்ற சிறிலங்கா அரசுக்கு பிரணாப் முகர்ஜி, வீரம் செறிந்த தூத்துக்குடி மண்ணில் எப்படி கால் வைக்கலாம், தமிழர்களை அதிகளவில் கொண்டிருந்த மாவீரர் நேதாஜி பிறந்த வங்க மண்ணில் இருந்து வந்துள்ள பிரணாப் முகர்ஜி குருதிக்கரையுடன் தூத்துக்குடிக்கு வருவது என்ன நியாயம் என்றார். எந்தப் பெரிய சிக்கல் என்றாலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கும் மத்திய அரசும், மாநில அரசும் இலங்கைத் தமிழர் சிக்கலில் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உள்ளிட்ட 185-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இப்பேரணியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.
Saturday, February 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.