Sunday, February 15, 2009

ஈழத் தமிழரைக் காக்க மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கரம் கோர்ப்போம்: வைகோ அழைப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்த வணிகப் பெருமக்களே மனித சங்கிலி அணிவகுப்பை வெற்றி பெறச் செய்யுங்கள். ஆசிரியர்களே, மருத்துவர்களே, பொறியாளர்களே, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் சார்ந்தோரே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபர்களே, வளரும் பிள்ளைகளே தமிழீழ மக்களைக் காக்க மனித சங்கிலியில் பங்கேற்பீர் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நெஞ்சைப் பிளக்கும் துன்பச் செய்திகள் இலங்கையிலே இருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13 ஆம் நாள்) வள்ளிபுனம், சுந்தரபுரம் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 132 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 358 தமிழர்கள் படுகாயம் அடைந்தனர். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. சிறுக சிறுகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். படுகொலைக்கு உள்ளான தமிழர்களின் பிரேதங்கள் சாலை ஓரங்களிலும், மண் மேடுகளிலும் சிதறிக் கிடக்கின்றனவாம். மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டதில் ஒரு வாரத்திற்கு முன்பே 800-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் மரண காயமுற்றனர். உலகில் எந்த ஒரு பகுதியிலும், எந்தப் போரிலும், எந்த ஒரு மோதலிலும் மருத்துவமனைகள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது இல்லை. வானூர்திகள் குண்டு வீசியதில்லை. ஆனால், கொலைவெறியுடன் கொக்கரிக்கும் கிராதகன் ராஜபக்ச இக்கொடுமையைச் செய்கிறான். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரை முல்லைத்தீவில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தின் மூலம் மிரட்டுகிறான். மருத்துவ பணியாளர்களை வெளியேற்றிவிட்டான். இலங்கையில் படுகொலைக்கு ஆளாகும் தமிழர்களைப் பாதுகாக்க இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கோர்டன் பிறவுண் போர் நிறுத்தத்தை கொண்டு வரவும், இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணவும் சிறப்புத் தூதுவரை நியமித்தார். ஆனால், சிறிலங்கா அரச தலைவர் எங்கள் நாட்டில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை. இதில் பிரித்தானியா தலையிடக்கூடாது என்று கூறி சிறப்புத் தூதுவரை ஏற்கமாட்டோம் என்று தன் அமைச்சரின் மூலம் அறிவித்து விட்டான். உலகத்தில் எந்த நாட்டிலும் ஒரு இனப்படுகொலை நடக்குமானால் அதனைத் தடுப்பதற்கு அனைத்துலக நாடுகளுக்கு உரிமை உண்டு. அதுதான் சேர்பியாவில் நடந்தது. கொசாவாவில் நடந்தது. கிழக்குத் திமோரில் நடந்தது. பாலஸ்தீன காசாவில் நடந்தது. ஏன் அவ்வளவு தூரம் போவானேன்? கிழக்குப் பாகிஸ்தான் வங்கதேசமாக உருவெடுத்ததே இந்தியாவால்தானே. அதைத்தான் நேற்று புதுடில்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தின் போது அகில இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன் அவர்களும், பார்வார்ட் பிளக் கட்சிப் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் அவர்களும், தெலுங்கு தேச கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் எர்ரன் நாயுடு அவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும், இந்திய தேசிய லோக்தளமும், தேசிய லீக் கட்சியும் வலியுறுத்தினார்கள். இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஸ்வந்த் சின்கா அவர்கள் 'இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. அது உள்நாட்டு பிரச்சினை என்று இலங்கை சொல்லமுடியாது. தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா முழு பலத்துடன் தலையிட வேண்டும். ஆயிரம் மடங்கு தலையிடலாம். ஆனால், இந்திய அரசு கடமை தவறி விட்டது. ஒரு மணி நேரம் கூட இனி தாமதம் கூடாது. ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் சிறிலங்கா அரசைக் கூண்டில் ஏற்ற வேண்டும்' என்று பேசினார். தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு, குடியரசுத் தலைவர் உரையில் ஒரு மோசடியான அறிவிப்பைச் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசு இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இதனால் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கூறுகிறது. உலகத்தில் இதுவரை எந்தப் போர் நிறுத்தத்திலும் ஒரு தரப்பினர் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று எவரும் சொன்னதில்லை. உலகத்தில் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவில் இருந்தும் தமிழர்களை அழிக்க ராஜபக்ச திரட்டி உள்ள ஆயுதங்களை கடலில் போடுவானா? அப்படிப் போடச் சொல்ல இந்திய அரசு முன்வருமா? ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. புலிகளின் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்தத் தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு துடிக்கிறது. இந்திய அரசு இதற்கு உடந்தையாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் கிட்லர் கோயபல்ஸ் மூலம் பொய்ச் பிரச்சாரம் செய்ததுபோல் சிங்கள அரசு அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுகிறது. முல்லைத்தீவில் சிங்கள அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் எவரும் செல்லவில்லை. ஆனால், 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக பச்சைப் பொய்யைப் பரப்புகிறது. கொத்துக்கொத்தாக தமிழ்க் குடும்பங்கள் குண்டுவீச்சுக்குப் பலியாகும் துன்பம் அங்கே. பிரபாகரன் அவர்களின் தாய்மாமனாரும், அவரது துணைவியாரும் இரண்டு நாட்களுக்கு முன் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வருகிறது. வயது முதிர்ந்தவர்களும், பச்சிளம் குழந்தைகளும் தாய்மார்களும் இராணுவத் தாக்குதலால் கொல்லப்படும் பேரழிவை எண்ணி மனம் பதைத்த முருகதாசன் என்கின்ற ஈழத் தமிழ் இளைஞன் லண்டனில் இருந்து புறப்பட்டு சுவிற்சர்லாந்து நாட்டுக்குச் சென்று ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு எதிரே தீக்குளித்து கருகிச் சாம்பலாகிவிட்டான். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசிப்பவர்களின் உள்ளங்களை உருக்கி, கண்களைக் குளமாக்கும் கடிதங்கள் எழுதி உள்ளான். அனைத்துலக சமுதாயமே எங்கள் தமிழ் மக்களை காக்க மனம் இரங்கமாட்டாயா? என்று சோகத்தைப் பிழிந்து, என் சாவு உங்கள் கவனத்தைத் திருப்பட்டும் என்று எழுதி உள்ளான். இதோ சில மணி நேரத்திற்கு முன்னால் ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவில் பிரதமர் வீட்டு முன்பாக தீக்குளிக்க முயன்றான் என்ற செய்தியும் இடியாகத் தாக்குகிறது. முத்துக்குமார் மேனியை எரித்த தீ, ஜெனீவாவில் முருகதாஸ் உடம்பிலும் எரிந்தது. தீயின் நாக்குகள் பள்ளபட்டி ரவியை, சீர்காழி ரவிச்சந்திரனை, சென்னை அமரேசனை, மலேசிய ராஜாவைத் துடிக்கதுடிக்க உடலைக் கருக்கி உயிரைப் பறித்துவிட்டது. இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கி குரல் கொடுத்தாக வேண்டும், அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த ஈழத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோர்த்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தமிழக மக்களே சிரம் தாழ்த்தி உங்களை மன்றாடி வேண்டுகிறேன். பாசத்தோடு வளர்த்தக் குழந்தை தடுமாறி தண்ணீரில் விழுந்து தத்தளித்து மூழ்க இருக்கையில் தாயின் கரங்கள் தாவிப் பற்றி அக்குழந்தையைக் காக்கத் துடிக்குமே. அப்படித்தான் தாய்த் தமிழகத்து மக்களும் நம் தொப்புள் கொடி உறவுகளை மரணத்தின் பிடியிலிருந்து காக்க கரங்களை நீட்டுங்கள். ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளுங்கள். உலகத்தின் அனைத்து நாட்டு மக்களின் கவனமும் இலங்கைத் தீவின் மீதும், தாய்த் தமிழகத்தின் மீதும் திரும்பி இருக்கின்றது. பெப்ரவரி 17 ஆம் நாள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம். சீனத்துப் பெருஞ்சுவரென வரிசையாக நிற்போம். ஆயிரம் அலுவல்கள் நமக்கு இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள். உணவும் இன்றி, மருந்தும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடியும் தமிழர்கள் அங்கே. குண்டு வீச்சில் உடல்கள் சிதறி இரத்த வெள்ளத்தில் மிதக்கும் கொடுமை அங்கே. வீடு இழந்து, வாழ்விழந்து தங்கள் பூர்வீக மண்ணிலேயே பீரங்கி குண்டுகளால் வேட்டையாடப்படும் கொடுமை அங்கே. அழுவதற்கு கூட அவர்களுக்கு சக்தி இல்லையே. நமக்கு கரங்கள் இருப்பது துன்புறும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கன்றோ என்ற உணர்வுடன் மாலை 4:00 மணிக்கே ஆங்காங்கு மனித சங்கிலிக்கு ஆயத்தமாகுங்கள். ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மனித சங்கிலியாக மாறுங்கள். ஈழத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலிகளை உடைப்பதற்கு நாம் அமைப்போம் மனித சங்கிலி. விவசாயப் பெருமக்களே உயிர்களுக்கு உணவு அளிக்க ஏர் பிடித்த உங்கள் கரங்கள் மனித சங்கிலியாகட்டும். தொழிலாளத் தோழர்களே உழைக்கும் உங்களின் உன்னத கரங்கள் தமிழரைக் காக்கும் படைக்கலன் ஆகட்டும். மாணவச் செல்வங்களே உங்களை நம்பித்தான் தன் உயிர் ஆயுதத்தைத் தந்தான் முத்துக்குமார். கண்ணை இமை காப்பதுபோல் ஈழத் தமிழரைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். கரம் கோர்த்து நில்லுங்கள். ஈழத் தமிழரைக் காக்கும் அறப்போரை முன்னெடுக்கும் வழக்கறிஞர்களே மனித சங்கிலியை முறைப்படுத்தி வெற்றி காணுங்கள். அரசு பணியாளர்களே வேலை முடிந்து வீடு செல்லும்முன் மனித சங்கிலியில் பங்கேற்று தமிழரைக் காக்க உதவுங்கள். பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்த வணிகப் பெருமக்களே மனித சங்கிலி அணிவகுப்பை வெற்றி பெறச் செய்யுங்கள். ஆசிரியர்களே, மருத்துவர்களே, பொறியாளர்களே, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் சார்ந்தோரே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபர்களே, வளரும் பிள்ளைகளே தமிழ் ஈழ மக்களைக் காக்க மனித சங்கிலியில் பங்கேற்பீர். தாய்த் தமிழகத்தின் மனவேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.