Thursday, February 26, 2009

பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரனை கடத்தவில்லை கைது செய்துள்ளோம்: சிறிலங்கா காவல்துறை அறிவிப்பு

[வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2009] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கொழும்பில் இருந்து வெளியாகும் 'சுடரொளி' மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள 'மகிந்த' மலர்ச்சாலையில் நடைபெற்ற அவரது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொண்டிருந்த வித்தியாதரன் மூன்று வெள்ளை வான்களில் சென்ற ஆயுததாரிகளால் பலாத்காரமாக கடத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் கடத்தப்படவில்லை என்றும் விசாரணை செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கல்கிசையில் கைது செய்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவிக்கின்றார். ஆனால், மரணச்சடங்கில் கலந்து கொண்ட வித்தியாதரனை ஆயுதம் தரித்த குழுவினர் பலாத்காரமாக இழுத்து வெள்ளை வானில் ஏற்றியதாகவும் அவ்வேளை, வித்தியாதரன் சத்தமிட்டார் என்றும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களில் பலரும் இதனைத் தடுக்க முயற்சித்த போது ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுததாரிகளில் சிலர் சீருடையில் காணப்பட்டனர் என்றும் நேரில் கண்டவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளதாகவே கல்கிசை, வெள்ளவத்தை காவல்நிலையங்களிலும் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வித்தியாதரன் கடத்தப்பட்டதாகவே உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிறுவனத்தினரால் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைப்புக்களும் அவ்வாறுதான் தகவல் கொடுத்திருந்தன. இன்று வியாழக்கிழமை காலை 9:45 நிமிடத்தில் அவர் கடத்தப்பட்டிருந்தார். சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் கடத்தப்பட்ட வித்தியாதரனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் காவல்துறை ஊடக பேச்சாளர் றஞ்சித் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளமையானது ஊடகவியலாளர் மத்தியில் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சந்தேகம் இருந்திருக்குமானால் வித்தியாதரனின் வீட்டுக்கு அல்லது அவரது அலுவலகத்திற்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சென்று விசாரனை நடத்தியிருக்கலாம் அல்லது விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கலாம். எதற்காக உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் வெள்ளை வானில் கடத்த வேண்டும் என்று ஊடக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. வித்தியாதரன் கடத்தப்படவில்லை அவர் கைது செய்யப்பட்டார் என்று தற்போது எதற்காக காவல்துறையினர் கதையை மாற்றுகின்றனர் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'சுடரொளி' பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக கடந்த வாரம் வித்தியாதரன் குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.