[புதன்கிழமை, 26 நவம்பர் 2008,]
இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் நாள் சந்திக்கவுள்ளனர். அனைத்து கட்சிக் கூட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை கூட்டினார்.
இக்கூட்டத்தினை அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தி.மு.க.வின் சார்பில் அமைச்சர்களான பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் டி.சுதர்சனம், துணைத் தலைவர் டி.யசோதா, பா.ம.க. சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், புரட்சி பாரதம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:
“இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்தியப் பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறிலங்கா அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சகவாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க்குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23.04.08 அன்றும், 12.11.08 அன்றும் இரண்டு முறை தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பி வைத்திருக்கின்றோம்.
14.10.08 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.
இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24.10.08 அன்று வரலாறு காணாத மனித சங்கிலி ஒன்றினை நடத்தி காட்டியிருக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் - அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் - ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் தொடருந்து நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாநிலை நடத்தி இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றனர்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டும் என்றும் அவர்களை சிறிலங்கா கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அவதியுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதியுதவி கோரி தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒரு மாத காலத்திற்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக்கொண்ட அக்கறையின் காரணமாகவும் போரினால் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவி பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புக்களின் மூலமாகவும் சிறிலங்காவில் உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது.
அது போலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு சிறிலங்கா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையில் இதுவரையில் கைகூடவில்லை. நாம் கேட்டுக்கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்கு தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும் சிறிலங்கா அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம்பிடிப்பதோடு இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களை எல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக்கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும் பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாக பிடிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று சிறிலங்கா சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில் பெருமளவில் அப்பாவி தமிழர்களும் அவர்தம் குழந்தைகளும் தான் கொல்லப்படுகின்றனர் என்றும் பெரும்பாலோனோர் அகதிகளாக்கப்பட்டு அல்லற்படுகின்றனர் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக்கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் அடைக்கலம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று திரிந்து கொண்டிருக்கின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்க விடாத நிலையில் இனி என்ன செய்வது என்று யோசித்ததில் மத்திய அரசு, சிறிலங்கா அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்றளவிற்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும் சிறிலங்கா அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்கள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் டிசம்பர் 4 ஆம் நாள் டெல்லியில் பிரதமர் அவர்களை சந்திப்பது என்றும் அதற்கிடையே நவம்பர் 28 ஆம் நாள் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது”.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, November 25, 2008
இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்திக்க முடிவு
Tuesday, November 25, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.