Monday, October 27, 2008

ஆறரைக் கோடி தமிழ் மக்களும் கொதித்து எழுந்திருப்பதை பிரணாப் முகர்ஜி மதிக்கவில்லை - பழ.நெடுமாறன்

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஈழத்; தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கொதித்து எழுந்திருப்பதை பிரணாப் முகர்ஜி மதிக்கவில்லை என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.சகோதர மக்களை படுகொலை செய்ய சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்குவதை முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த அறிவிப்பு, முதல் அமைச்சரையோ, அனைத்துக் கட்சிகளையோ அவர் கொஞ்சமும் மதிக்கத்தயாராக இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் திட்டவட்டமாக, தெளிவாக தமிழர் விரோத போக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில்; இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஒருபக்கம் ஈழப் பிரச்சினையை அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை... அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? என்று பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு, ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். முரண்பட்ட நிலைகளை இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கினை இந்திய அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாவும், காங்கிரஸ்காரர்களும் கூப்பாடு போடுகிறார்கள் என்பதற்காக வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் போன்றவர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். இலங்கையில் அன்றாடம் கொல்லப்படும் சகோதர சகோதரிகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தது குற்றம் என்று சொன்னால், ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன். நாகலாந்திலும் மிசோரத்திலும், காஷ்மீரிலும் இந்திய அரசு தடை செய்திருக்கும் இயக்கங்களின் தலைவர்களுடன் இந்திய பிரதமர்கள் தொடர்ந்து பேச்சு நடத்துகிறார்கள். ஆனால் தமிழர் பிரச்சினை என்று வரும்போது மட்டும் வேறு விதமாகச் செயல்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம். இன்றைக்குப் பதவியில் இருக்கக்கூடிய பல காங்கிரஸ்காரர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல. அவர்கள் பதவிக் காங்கிரஸ் காரர்கள். விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.