Thursday, July 17, 2008

வெள்ளை வான் கடத்தல்களில் கருணாவுடன் மீண்டும் கூட்டுச்சேர்ந்த சுமன்

[வியாழக்கிழமை, 17 யூலை 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டு வரும் குழுவுடன் வெளிநாட்டிலிருந்து சிறிலங்கா திரும்பிய துணைப்படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான சுமன் என்பவரும் இணைந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைத்தரப்புடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவில் சுமன் முன்னர் செயற்பட்டு வந்தார். இருப்பினும் நிதி மோசடி மற்றும் பெண்கள் தொடர்பு போன்ற பிரச்சினைகளால் பிள்ளையானால் எச்சரிக்கப்பட்டு அவரது குழுவிலிருந்து சுமன் நீக்கப்பட்டார். இதனையடுத்து, வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றிருந்த சுமன், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கொழும்பு திரும்பி, சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றார். மேலும் சிறிலங்கா திரும்பிய கருணாவையும் தொடர்புகொண்ட சுமன், அவருடன் இரகசிய சந்திப்பையும் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாவின் கண்காணிப்பின் கீழ் சுமன், கடந்த சில நாட்களாக கொழும்பின் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களிடம் பணம் பெறும் நோக்கில் வெள்ளை வான் கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தை மற்றும் தெகிவளைப் பகுதிகளில் உள்ள தமிழ் இளைஞர்களின் விவரங்களை சுமன் திரட்டி வெள்ளை வான் கடத்தல்களை மேற்கொண்டு வருதாக தெரியவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மட்டக்களப்புக்கு சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி ஒருவருடன் பஜீரோ வாகனத்தில் சுமன் சென்று வந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.