(வியாழக்கிழமை, 17 யூலை 2008) வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். பூந்தோட்டம் முகாமில் உள்ள குடிசை ஒன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கையடுத்தே அப்பகுதியில் இருந்த 112 வீடுகளும் எரிந்து சாம்பராகின. தீ பரவத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தபோது தீ விரைவாக பரவி அங்கிருந்த அனைத்து குடிசைகளையும் எரித்து சாம்பராக்கியதுடன் மக்களின் சொத்துகளும் எரிந்து நாசமாகியுள்ளன. தீ பரவியதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகிய பின்னரே தீயைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிந்தது. இந்த தீ அனர்த்தத்தின்போது ஜந்து பேர் சிறிய எரிகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் தற்போது அரச அதிபர் கே.சண்முகத்தின் ஏற்பாட்டில் அங்குள்ள பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு மற்றும் உடைகளை பொது அமைப்புக்கள் பலவும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அரச அதிபர் கே.சண்முகம் தெரிவித்துள்ளதாவது: இன்றைய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பணியை உடனடியாக ஆரம்பித்துள்ளோம். முகாமிலிருந்த நூற்றுக்கும் அதிகமான குடும்பங்களின் குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. தீ விபத்திற்கு மின்சார ஒழுக்கே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார். பூந்தோட்டம் பாடசாலைக் கட்டடத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.