Sunday, July 06, 2008

தோல்வியில் முடிந்த சிறிலங்காப் படையினரின் கொமோண்டோத் தாக்குதல்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008] மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தது எவ்வாறு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து "லக்பிம" வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: கடந்த வியாழக்கிழமை மாலை இராணுவத்தின் இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்டைச் நேர்ந்த 3 குழுக்கள் மன்னாரின் வடமேற்கு கரையோரம் உள்ள விடத்தல்தீவு பகுதிக்குள் உள்நுழைய முற்பட்டிருந்தனர். இந்தக் குழுவில் காட்டுப்புற சமருக்கு என சிறப்பு பயிற்சி பெற்ற பல கொமோண்டோக்கள் அடங்கியிருந்தனர். மிகவும் அதிகளவு ஆயுதங்களை சுமந்தவாறு நகர்ந்த இந்த அணி, விடுதலைப் புலிகளின் பகுங்கு குழிகளை அண்மித்த போது மோதல்கள் வெடித்திருந்தன. தலா நான்கு பேர் கொண்ட இந்த மூன்று அணிகளுக்கு சார்ஜன் அசித குமார, கோப்ரல் வணசிங்க, லயன்ஸ் கோப்ரல் இந்திய குமார ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர். மோதல்கள் மிகவும் உக்கிர நிலையை அடைந்த போது வான் தாக்குதல் உதவிகளை இந்த அணி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. மோதல்கள் தொடர்ந்தன. விடுதலைப் புலிகளின் பதுங்குகுழியை அண்மித்த சார்ஜன் குமார ஆர்பிஜி தாக்குதலில் சிக்கி கொண்டார். அதனைத் தொடர்ந்து கோப்ரல் வணசிங்கவும் காயமடைந்ததுடன், பின்னர் மரணத்தை தழுவியிருந்தார். 12 பேர் கொண்ட இந்த அணியினர் ஆரம்பித்த மோதல்கள் 5 மணி நேரம் நீடித்தன. இதனைத் தொடர்ந்து இராணுவம் மீட்பு அணி ஒன்றை அனுப்பியது. இந்த அணியினருக்கு லெப். கொல்லுரை தலைமை தாங்கியிருந்தார். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலில் சிக்கி கொல்லுரையும் காயமடைந்திருந்தார். தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகி வருவதை உணர்ந்த லயன்ஸ் கோப்ரல் இந்திய குமார பின்வாங்கி தப்பிச் செல்வதற்கு தீர்மானித்ததுடன், எஞ்சிய கொமோண்டோக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி சென்றிருந்தார். இராணுவம் மேற்கொண்ட இந்த கொமோண்டோ தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததில் 12 பேர் கொண்ட அந்த அணியையும், அவர்களுக்கு உதவிக்கு விரைந்த அணிகளையும் சேர்ந்த இரு கொமோண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், இருவர் காணாமல் போயிருந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். விடத்தல்தீவை குறிவைத்து இராணுவத்தின் 58 ஆவது படையணி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளம் அங்கு இருப்பதாக படையினர் தெரிவித்து வருகின்றபோதும், விடுதலைப் புலிகள் அந்தத் தளத்தை கைவிட்டு விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பெரியமடுப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவைச் சேர்ந்த ஒரு பிளட்டூன் படையினாரில் (பொதுவாக ஒரு பிளட்டூன் 30 படையினரை கொண்டிருப்பதுண்டு) 25 பேர் விடுதலைப் புலிகளின் நேரடியற்ற சூட்டுத்தாக்குதல்களில் காயமடைந்ததாக அந்தச் சமரில் பங்குபற்றிய படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார். நான்காவது ஈழப்போர் இந்த மாதத்துடன் மூன்றாவது வருடத்தை அடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கம் மாவிலாறில் முழு அளவிலான போரை தொடங்கியிருந்தது. அதற்கு 3 நாட்களின் பின்னர் கிழக்கில் உள்ள 4 படை முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை தொடுத்திருந்தனர். பின்னர் வடபோர்முனையில் ஆரம்பித்த பெரும் சமர் நாலாம் கட்ட ஈழப்போரை தீவிர கட்டத்திற்கு நகர்த்தியிருந்தது. இது மட்டும் ஜூலை மாதத்தின் முக்கியத்துவமல்ல, 25 வருடங்களுக்கு முன்னர் ஜூலை 23 ஆம் நாள் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முதலாவது பெரிய பதுங்கித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மன்னாரின் நெல்விளையும் பிரதேசத்தை கடந்த வாரம் தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் இராணுவம் 170-க்கும் அதிகமானோரை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் நடைபெறப்போகும் மோதல்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளை அண்மித்துள்ளன. 58 ஆவது படையணியின் இறுதி இலக்கு விடத்தல்தீவாகும். மன்னாரின் நெல்விளையும் பிரதேசத்தை கைப்பற்றுவதும் அதனை தக்க வைப்பதுமே 58 ஆவது படையணியின் உருவாக்கத்தின் நோக்கம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கை படையணி இரண்டு என்ற படையணி ஏ-9 பாதைக்கு மேற்குப்புறம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.