Wednesday, June 18, 2008

மூதூர் படுகொலைகளை விசாரணை செய்ய அனைத்துலக குழு அவசியம்: பிரான்ஸ் தொண்டர் அமைப்பு

[புதன்கிழமை, 18 யூன் 2008,] திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக விசாரணைக்குழு அவசியம் என்று பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தப் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக அனைத்துலக விசாரணைக்குழுவை அமைப்பதற்கு பிரான்ஸ் அரசு, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்கா அரசு, இணைத்தலைமை நாடுகள் ஆகியன முன்வர வேண்டும். இதன் மூலமே மூதூர் படுகொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துலக உதவி அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை "மூதூர் படுகொலைகளுக்கான நீதி" என்னும் தலைப்பில் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கம். இதன் போது பிரான்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் உல்ஃப் கென்றிசன் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் விசாரணைகளில் நீதி கிடைக்கும் என நான் நம்பவில்லை. 17 தெண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகளில் சிறிலங்காப் படையினருக்கு தொடர்புகள் உண்டு. படுகொலைகள் இடம்பெற்ற போது அப்பகுதி இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. அதனை பல தரப்புக்கள் எமக்கு உறுதிப்படுத்தியிருந்தன. அதனை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு சுயாதீன, அனைத்துலக ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.