[திங்கட்கிழமை, 19 மே 2008] தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா, இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய், தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் ஊடகமான ஏரிக்கரை பத்திரிகையின் வாரப் பதிப்புக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னர் ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த வரதராஜப்பெருமாள் போன்று பிள்ளையானும் இந்தியாவினால்தான் இயக்கப்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு, மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வர் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கருணா நாடு திரும்பிய பின்னர் பிள்ளையான் தலைமையிலான குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அது பிள்ளையான் குழுவைப் பொறுத்தது. அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வட போர்முனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்று க்கு பதிலளிக்கையில், முதல் முறையாக விடுதலைப் புலிகள், வன்னியில் நான்கு போர் முனைகளால் முன்னேறும் அரச படையினரை எதிர்கொண்டுள்ளனர். 90 ஆயிரம் படையினரின் இந்த முற்றுகையின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சிறிது சிறிதாக அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. சண்டையிடுவதற்கு ஒருவருமே எஞ்சியிராத நிலை வெகு விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அமைதிப் பேச்சுக்கள் குறித்து கேட்டபோது, விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற கதைக்கே இனி இடமில்லை. இது விடயத்தில் எந்த புறச்சக்திகளின் கட்டளைக்கும் அரசு அடிபணியாது வெளிநாடுகள் எமக்கு நண்பர்களாக இருக்கும் வரை அவர்களின் பங்கு, பணி பாராட்டப்படும். எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை அவர்களுக்கு கிடையாது. அந்த வகையில், விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தை செய்து கொள்ளவும் அரசு தயாரில்லை. அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு, அமைதிப் பேச்சுக்களில் தமக்குள்ள நேர்மையை காண்பித்தால் அது தொடர்பாக அரசு பரசீலிக்கும். அமைதிப் பேச்சுக்கள் வெளிநாடுகளில் ஒன்றும் நடைபெறாது. உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டில்தான் பேசப்படும் என்று கூறியுள்ளார்.
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.