[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூசா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து இவர்கள் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்படுவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் நேற்றிரவு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிற்கு தேவையான உடைகள் மற்றும் உணவுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலேயே பெற்றோரையும் பூசாவுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன், கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அதேநேரம் நாளை கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை நாடாளுமன்ற வளாக கட்டடத் தொகுதிக்கும் அழைத்துச் அங்கு பல்வேறு சந்திப்புகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். அத்துடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு அவசர கடிதம் ஒன்றையும் நேற்று அனுப்பியிருக்கின்றேன். அந்த கடிதத்தில் அரச தலைவர் ராஜபக்சவின் அரசாங்கம் இந்தியத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான உத்தரவை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியிருகிறது. எனவே இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் உடன் தலையிட்டு தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறேன். பூசாவுக்கு அனுப்பட்டவர்களில் கணவன், மனைவி கூட உள்ளனர். ஆனால் அவர்களது பிள்ளைகள் இங்கே உள்ள விடுதிகளில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே கைது செய்யப்பட்ட தமிழர்களை கொழும்பிற்கு வெளியே அனுப்பமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. அதனால் பூசாவுக்குள் கொண்டுசென்று அடைக்கின்றனர் என்றார். இதேவேளை தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பணிப்புறக்கணிப்பு ஒன்றிற்கான அழைப்பை விடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளை இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Sunday, December 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.