[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா காவல்துறையினரும், முப்படையினரும் அடாவடித்தனமான கைதுகளை மேற்கொள்வதாக சிறிலங்காவின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: சமாதானத்தையும், சமுதாய மறுமலர்ச்சியையும் எதிர்பார்த்து அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் அண்மைக்கால சம்பவங்களாலும், கெடுபிடி நடவடிக்கைகளாலும் கடத்தல், கொலை, கப்பம் கோரல், கைதுகள் போன்ற செயல்களாலும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படக்கூடிய நிலையில் காவல்துறையினர் அடாவடித்தனமாக கைதுகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மகரகம, களனி பாலம் வீதிகளில் நின்று வத்தளைப் பகுதியில் சோதனைகளை நடத்தும் முப்படையினர் "தமிழர்கள் இருக்கின்றார்களா?" என்று அநாகரிகமாக நடந்து கொள்வது இன உறவுகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். வெல்லம்பிட்டி, புறக்கோட்டை, பொரளை காவல் நிலையத்திற்குள் அதிகாரிகள் "தமிழர்கள் எல்லோரும் புலி" என்றும் "எத்தனை பதிவுகளிருந்தாலும் தமிழர்களை நம்ப முடியாது" என்றும் கடந்த இருபதாண்டு கால யுத்தத்திற்கு தமிழர்கள் ஆதரிவளிப்பதாகவும் பகிரங்கமாக தமிழர்களை அவதூறாக பேசியிருப்பதன் மூலம் காவல்துறையினர் மற்றும் முப்படையினர் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்களில் இருந்தும் அரச படைகளின் அனுசரணையுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களிடமிருந்தும் தப்பித்து தலைநகருக்கு வரும் வடக்கு-கிழக்கு தமிழ் இளைஞர்கள் அனைவரையும் ஊனக்கண்ணுடன் புலிகளாக பார்ப்பது எந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் என்று புரியவில்லை. பாதுகாப்பு வலயங்கள், பாதுகாப்பு அரண்கள், வாகன வீதிச் சோதனைகள் பாரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதனையும் மீறி இடம்பெறும் சம்பவங்களுக்கு அப்பாவித் தமிழ் மக்கள் பலிக்கடாகளாக்குவதை விடுத்து தமது பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனத்தை திருத்திக்கொள்ள வேண்டும். மலையக தொழிலாளர்களின் பிள்ளைகள் சகல ஆவணங்களையும் வைத்திருக்கிறார்கள். அத்துடன் தமது வதிவிடம் வடக்கு-கிழக்கு இல்லம் என்பதை தெளிவுபடுத்தியபோதும் "தமிழன்" என்ற ரீதியில் கைது செய்வது மலையகத்துக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மலையக அரசியல் பிரதிநிதிகள் தமக்குள் நடந்து கொண்டிருக்கும் அரசியல் இழுபறிகளை மறந்து, தமிழர்கள் கைதாவது குறித்து தீர்க்மான முடிவெடுத்து செயற்படுவதற்கு உடன் முன்வர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படும்போது "ரோம ராஜ்ஜியம் எரியும்போது "நீரோ மன்னன்" பிடில் வாசித்து கொண்டிருந்ததைப்போல எம்மால் இருக்க முடியாது. பட்டங்கள், பதவிகள் வரும், போகும். ஆனால் தமிழ் மக்களின் உரிமை, உடமை உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது பதவிகளைவிட தமிழச் சமுதாயம் முக்கியம் என்ற உணர்வு ஏற்படுதல் வேண்டும். கைதுகள் தொடர்பில் நிகழும் அடாவடித்தனங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதற்குத்தகுந்த பலன் கிடைக்காத பட்சத்தில் நாமும் நமக்குரிய உரிமைகளின் பிரகாரம் மக்களின் அபிலாஷைகளுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்துடன் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
Sunday, December 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.