[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் எதுவித வேண்டுகோளையும் எப்போதும் விடுவிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லூய்ஸ் ஆர்பருக்கு சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க அனுப்பிய கடிதம்: உங்கள் கருத்துக்கள் தொடர்பாக நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நவம்பர் 5 ஆம் நாளிட்ட எனது கடிதத்தில் நான் மீண்டும் தெரிவித்திருந்தேன். உங்கள் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்ததாக நீங்கள் தெரிவித்தீர்கள் என்ற செய்தி வியப்பளிக்கிறது. நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் அலுவலகத்தை அமைக்க அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை விடுத்ததாக எமக்குத் தெரியவில்லை. அரசியல் யாப்புச் சபை செயற்படாத நிலையில் மனித உரிமை ஆணையாளர்களை மகிந்த ராஜபக்சவே நியமிப்பதனைத் தவிர அவருக்கு மாற்று வழியில்லை. அரசியல் யாப்புச் சபை செயற்பட முடியாதிருப்பதற்கு எமது அரசாங்கம் காரணமல்ல. எமது நாடாளுமன்றத்தில் உள்ள சிறிய கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாமையே காரணமாகும். இக்குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றினூடாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளார். ஆப்கானுக்குச் அண்மையில் சென்ற லூய்ஸ் ஆர்பர், பி.பி.சி. ஊடகவியாலாளருக்கு அளித்த நேர்காணலில் இலங்கையில் மனித உரிமைக்ள் நிலவரத்தை ஆராய்வதற்கு நம்பகரமான குரலொன்று இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைக்க வேண்டும் என்று தாம் பகிரங்கமாக சிறிலங்கா அரசிடம் கோரியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணாக, அரச தலைவரினால் நேரடியாக நியமிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி அதன் செயற்பாட்டு வலுவை விமர்சித்திருந்தார். இதனையடுத்து இக்கடிதத்தை மகிந்த சமரசிங்க அனுப்பி வைத்துள்ளார்.
Sunday, December 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.