[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007]
ராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெளிவரும் நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு (நவம்பர் 17) அவர் அளித்துள்ள நேர்காணல்:
ஒரு படுகொலைக்கு எழுதப்பட்ட இரங்கல் கவிதை தமிழக அரசியலில் கூட்டணி சர்ச்சைகளையும், ஆட்சிக் கவிழ்ப்புக் குரல்களையும் அதிகப்படுத்தியிருக்கிறது. உணர்வு ரீதியான வெளிப்பாட்டை சட்டம் அனுமதிக்குமா? இந்த உணர்வு கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவரும் வழக்கறிஞருமான கி.வீரமணியை சந்தித்தோம்.
நக்கீரன்: தமிழ்ச்செல்வனுக்கு கவிதை நடையில் முதல்வர் தெரிவித்த இரங்கல் தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் பிரச்சினையாக்கப்பட்டிருக்கிறது. முதல்வரைச் சூழ்ந்துள்ள புதிய நெருக்கடியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கி.வீரமணி: உலகம் முழுவதுமே அனுதாபப்படக்கூடிய, பட்டுக்கொண்டிருக்கிற ஓர் நிகழ்வை, இங்கே துரும்பைத் தூணாக்குவது போல ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர் வெறும் முதல்வர் மட்டுமல்ல. அடிப்படையிலே ஒரு தமிழர். அந்த வகையிலே உணர்வைக் காட்டியிருக்கிறார்.
நக்கீரன்: முதல்வர் பொறுப்பிலே இருப்பவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவரின் மறைவுக்காக வெளிப்படுத்தும் தனிப்பட்ட உணர்வுகளை அரசு செய்திக்குறிப்பாக எப்படி வெளியிட முடியும் என நீதிமன்றத்தில் வாதிடவும் தயாராகி வருகிறார்களே?
கி.வீரமணி: தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் சாதாரணமாக அனுப்பியிருக்கிறார்களே தவிர, அவருடைய உணர்வு என்பது அரசாங்க ரீதியாகவோ, அமைச்சரவை கூடியோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதனால் இறையாண்மைக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
நக்கீரன்: முதல்வர் எழுதிய இரங்கல் கவிதை, உணர்வு ரீதியாகச் சரியாக இருக்கலாம். சட்டத்தின் பார்வையில் சரியாக இருக்குமா? சட்டம் இதை அனுமதிக்குமா?
கி.வீரமணி: பிரதமரே காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இயக்ககங்களுடன் சமாதானம் பேசுகிறார். நாகாலாந்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் பத்மநாபா பேசினார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இலங்கைக்குச் சென்றார். ராஜபக்சேயுடன் பேசினார். அப்போது, விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசுங்கள் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம். சிதம்பரம் இந்தியாவின் நிதியமைச்சர். இந்நாட்டின் சார்பாக இலங்கைக்குச் சென்ற அவர் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்த நாட்டு அதிபரிடம் சொல்கிறார் என்பதற்காக அவர் மீது வழக்கு போடமுடியுமா? கலைஞரின் கவிதையை விடவும் இது ஆழமான விஷயம். ஆனாலும், அவர் மீது வழக்குப்போட வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். காரணம், அவரது இந்தப் பேச்சு ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது. முதல்வரின் கவிதையும் மனிதாபிமானம் அடிப்படையிலானது. இது குறித்து வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றம் இதை அனுமதிக்கும் என்று தோன்றவில்லை.
நக்கீரன்: விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினாலும் மற்றொரு மத்திய அமைச்சரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குரல் கடுமையாக ஒலிக்கிறதே? தமிழ்ச்செல்வனுக்காக முதல்வர் எழுதிய கவிதையும் தமிழகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டங்களும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கல் கூட்டத்தில் கடுமையாக கண்டிக்கப்பட்டிருக்கிறதே?
கி.வீரமணி: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவரவர்க்கு தோன்றுவதை சொல்லலாம் என்ற நிலைமைதான் இருக்கிறது. தமிழகக் காங்கிரசில் பல குழுக்கள் இருப்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இவர்களில் அதிமுக ஆதரவு காங்கிரசாரும் இருக்கிறார்கள்.
இதுபற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தியின் முடிவுதான் முக்கியம். அவர் இதுவரை இந்தப் பிரச்சினை குறித்து எதிராக எதுவும் சொல்லவில்லை. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோதும் இதுபற்றி பேசவில்லை. அதனால் கூட்டணிக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தலை இருக்க வால் ஆடவேண்டிய அவசியமில்லை. வால், தலைமையை நிர்ணயிக்க முடியாது. மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட குரல்தான். அதற்கு தனிப்பட்ட காரணங்களும் உண்டு.
நக்கீரன்: கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கட்சிகளிடமிருந்து மாறுபாடான கருத்துகள் வெளிப்படும் வகையில் உணர்வுபூர்வமான விஷயங்களைத் தொடவேண்டியது அவசியமா?
கி.வீரமணி: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அறவழியிலேயே ஆதரவு கொடுப்பது தவறல்ல. தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. அதற்குரிய வகையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இதைச் சில சக்திகள் விரும்புவதில்லை. அவர்கள் ராஜிவ் காந்தி மரணத்தை முன்வைத்து, இதை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.அந்தப் படுகொலையை நாம் ஆதரிக்கவில்லை. அது தவறு என்று கண்டிக்கிறோம். ஆனால், அதை மட்டுமே காரணம் காட்டி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது.
இந்திரா காந்தி அம்மையாரை சீக்கியர்கள் கொன்றார்கள் என்பதால் அவர்களைப் புறக்கணித்து விட்டோமா? இன்றைக்கு ஒரு சீக்கியர்தானே பிரதமராக இருக்கிறார். காந்தியைக் கொன்ற கோட்சே கும்பல்தான் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் வரவேண்டும் என்கிறது. இத்தகைய உதாரணங்களைப் பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எந்த வகையில் உதவுவது என்பதைப் பார்க்க வேண்டும்.
நக்கீரன்: முதல்வருக்கு எதிராகத் தோன்றியுள்ள புதிய நெருக்கடிகளை தீர்ப்பதற்கும், வழக்கு போடப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கும் திராவிடர் கழகம் எந்த வகையில் உதவும்?
கி.வீரமணி: முதல்வர் அவர்களுக்கு எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பது தெரியும். இந்தியாவிலேயே மூத்த அனுபவமிக்கத் தலைவர் அவர். அவருடைய ஆட்சிக்கு திராவிடர் கழகம் காப்பாளனாக இருக்கும். அது எங்கள் கடமை. தி.க.வுக்கும் தி.மு.க.வுக்குமானது தோழமை அல்ல் உறவு. தள்ளி இருந்தாலும் கூட உறவு உறவுதான். அது எப்போதும் நீடிக்கும் என்று அதில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
Saturday, November 17, 2007
ராஜீவ் மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது: கி.வீரமணி
Saturday, November 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.