[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007] தனது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு போதிய எம்.பிக்களின் ஆதரவின்றித் தடுமாறும் அரசுத் தலைமை, பிரதான எதிர்க்கட்சிகளுள் ஒன்றான ஜே.வி.பியைத் தனக்கு ஆதரவாக வளைத்துப்போடும் முயற்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அறிவிப்பை எந்தநேரத்திலும் விடுக்கலாம் எனக் கொழும்பில் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய தடை உத்தரவு ஒன்றை உடனடியாக விடுப்பது குறித்து அரசுத் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நாடாளுமன்றில் இடம்பெறுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த வரவு செலவுத்திட்டத்தை முற்றாக எதிர்க்கக் கங்கணம் கட்டி நிற்கின்றன. மற்றொரு எதிர்க்கட்சியான ஜே.வி.பியும் இந்த வரவு செலவுத் திட்டத்தை கொள்கை அளவில் எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அந்தக் கட்சி வாக்களிக்குமா அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலேயே எதிர்ப்புக் காட்டுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அரசுக்கு உள்ளேயே, அரசுத் தலைமைக்கு எதிரான புகைச்சல்கள் வலுத்துள்ள நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக முழு மூச்சில் வாக்களிப்பது என்று ஜே.வி.பி. தீர்மானிக்குமானால், இந்த அரசு கவிழக் கூடிய சூழல் உறுதியாகும். இந்தப் பின்னணியில் ஜே.வி.பியை வளைத்துப் போட்டு, வரவு செலவுத் திட் டத்துக்கு எதிராக அதை வாக்களிக்காமல் தடுக்கச் செய்வதற்கு அரசுத் தலைமை பகீரதப் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் அரசை ஆதரிப்பதற்கு ஜே.வி.பி. நான்கு முன் நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. புலிகளுடன் அரசு செய்து கொண்டுள்ள 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தற்போதைய அரசு முறித்துக் கொள்ள வேண்டும் என்பது அக்கோரிக்கைகளில் ஒன்று. பௌத்த, சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி., தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அதற்கு ஆதரவான தமிழர் தரப்புகளுக்கும் எதிராகக் கடும் நிலைப்பாட்டைப் பின்பற்றுமாறு அரசை வற்புறுத்தி வருகின்றது. பஸில் கோடி காட்டினார் அத்தகைய ஜே.வி.பியை வளைத்துப்போடும் திட்டமாக அக்கட்சியை தாஜா செய்யும் முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது மீண்டும் தடை விதிப்பதற்கு அரசுத் தலைமை ஆலோசித்து வருகின்றது. நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இத்தகைய தடை அறிவிப்பு ஒன்றை விடுத்தால், அவ்வாறு புலிகளுக்கு எதிராகத் தீவிரப் போக்கை வெளிப்படுத்தும் அரசை கவிழ விடாமல் ஜே.வி.பி. காப்பாற்றி, காபந்து பண்ணும் என அரசுத் தலைமை நம்புகின்றது என்றும் கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரது சகோதரரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷ, அரச சார்பு ஊடகங்களின் தலைவர்களை ஓரிரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான தமது தமையனாரிடம் இவ்வாறு புலிகள் மீது தடை விதிக்கின்ற அறிவிப்பை விடுக்கும் திட்டம் ஒன்று உள்ளது என்பதையும் அது ஆழமாகப் பரிசீலிக்கப்படுகிறது என்பதையும் கோடிகாட்டினார் என்று கூறப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து புலிகள் இயக்கம் மீது முதலில் உத்தியோகபூர்வ தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2002 பெப்ரவரியில் அப்போதைய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அந்தத் தடை அப்போதைய அரசினால் நீக்கப்பட்டிருந்தது.
Saturday, November 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.