Sunday, November 04, 2007

இனியேனும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: தமிழர் கழகம்

[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007] சிங்கள அரசுக்கு இனியேனும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழர் கழகத்தின் (தமிழ்நாடு) தலைவர் புதுக்கோட்டை பாவாணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சிங்களப் பேரினவாத அரசின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு அன்புமணி, முகுந்தன், கலையரசன், ஆட்சிவேல், மாவைக்குமரன் ஆகிய முன்னணிப் போராளிகளும் வீரச்சாவெய்தி உள்ளனர். தமிழீழத்தின் சார்பில் பேச்சுரைகளில் பங்கெடுத்துக் கொண்டு சிங்கள அரசின் பொய்முகமூடிகளை உலக அரங்கில் பலமுறை கிழித்தெறிந்த ஆற்றல் வாய்ந்த பேச்சாளர் சு.ப. தமிழ்ச்செல்வன். சிரித்த முகத்தோடு எதையும் நேர்கொள்ளும் உறுதி வாய்ந்த நெஞ்சம் படைத்தவர் சு.ப. தமிழ்ச்செல்வன். 1984 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அவர் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராகப் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டு தென்மராட்சிப் பகுதிப் பொறுப்பாளரான அவர் பல போர்க்களங்களின் வீரத்தையும் படை நடத்தும் ஆற்றலையும் வெளிப்படுத்தினார். 1991 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். 1995 முதல் தமிழீழத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்து இன்று களத்தில் வீழ்ந்திருக்கிறார். பயங்கரவாத நாடுகளான அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்துகின்ற கொடுமையான அனற்குண்டுகளை வீசிக் கொன்றிருக்கிறது சிங்களம். தம்மை அரசியற் களத்திலும் போர்க்களத்திலும் பலமுறை வீழ்த்திய தளபதியை வீழ்த்தி விட்டோம் என்று கொக்கரிக்கிறது சிங்களம். இது தமிழீழத் தலைவர்களுக்கு எச்சரிக்கை என்று எக்காளமிடுகிறது சிங்களம். அண்மையில் அனுராதபுரத்தைத் தாக்கி சிங்கள வான்படையின் வல்லமையைத் தகர்த்த போது மகிழ்ச்சிக் கடலில் மிதந்த புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்த செய்தியில் தமிழீழப் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்கள் தலைக்கனமின்றி வெளியிட்ட "எங்கள் தாயகத்தை நோக்கிய நெடும்பயணத்தில் வரக்கூடிய இடர்களும் மகிழ்ச்சிகளும் அனைத்தையும் சமமாக ஏற்றுக்கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டும்" என்ற செய்தியை நாம் சிங்கள வாய்க்கொழுப்பாளர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். தமிழ்க்குடியை முற்றிலுமாக அழித்துவிட எண்ணங்கொண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச்செயல்பட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு தமிழக மக்கள் வரிப்பணத்தில் போர்க்கருவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இனியேனும் அத்தகைய உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என எச்சரிக்கின்றோம். தமிழீழ களத்தில் விதையாக வீழ்ந்த வீரர்களின் நினைவில் விழிநீர் ஊற்றுவோம்! நாளை அது தமிழீழமாய் விளையும்.! தமிழர் வாழ்வு விடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.