Saturday, November 03, 2007

சர்வகளப் போராளி தமிழ்ச்செல்வன் - இதயச்சந்திரன்

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007] 02-11-2007 அதிகாலை 6.00 மணியளவில், சிறீலங்கா வான் படையினரின் குண்டு வீச்சினால் வீரச் சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைச் செயலர் சு.ப.தமிழ்செல்வனிற்கும் அவரோடு உயிர்நீத்த ஏனைய 5 போராளிகளிற்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் வீரவணக்கம், விடுதலைப்புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் புதிய செய்தி சொல்லப்பட்டிருப்பதாக, மகிந்தவின் தம்பியும், சிறீலங்கா படைத்துறைச் செயலருமாகிய பேரினவாதி கோத்தபாய ராஐபக்ச ரைட்ரருக்கு கூறியுள்ளார். புலித்தலைவர்கள் இருப்பிடங்கள் தமக்கு தெரியும் எனவும் ஒவ்வொருவராக அழிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சிங்கள பேரினவாதத்தின் வக்கிர நிலை உச்சகட்டத்தை எட்டிவிட்டதென்கிற செய்தியே கோத்தபாயவின் வாய்மொழியூடாக வெளிவருகிறது. மனித விழிமியங்களும், பண்பாட்டு தளங்களும் சிதைவடைந்து, சிங்களத்தின் குரூரமுகம் ஒற்றை பரிமாணமாக நிலைநிறுத்தப்படுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக கலந்து கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளரை மறுதரப்பு அழித்து விட்டது. பேசித் தீர்க்கச் சொல்லும் சர்வதேசம், இப்படுகொலைக்கு என்ன பதில் கூறபோகிறது.? பதினான்கு நாட்கள் அவகாசம் வழங்காமலே எல்லரவற்றையும் செய்கிறது அரசு. இவ்வாறான சோகமான நிகழ்வுகளை, மௌனமாகப் பார்வையிடலாம் சர்வதேசம். ஆனாலும் தாயக, புலம்பெயர் மக்கள், சர்வதேசம் போல் மௌனித்திருக்க முடியாது.ஆகவே இழப்புகளைச் சாதனையாகக்கும் வித்தை தெரிந்த தலைவரின் கரங்களைப் பலப்படுத்து இளங்கோ சொன்ன இறுதிச் செய்தியை , மறுபடியும் மீட்பும் பார்க்க வேண்டிய காலத்தின் தேவையை மக்கள் உணர வேண்டும். விடுதலையின் அவசியத்தை அடிக்கடி உணர்த்துகிறான் எதிரி. சமாதானத்திற்கு வழங்கிய பேரிழப்புகளை இத்தோடு நிறுத்த வேண்டுமாயின் சகல மக்களும் ஓரணியில் திரள வேண்டும். மாவீரராகிய சு.ப தமிழ்செல்வன், போராட்ட விரிதளத்தின் சகல திசையெங்கும் கால்பதித்து மூழ்கி எழுந்த மறவன். தலைவனின் அரசியல் தளபதி, போராட்ட களத்தில் விழுப்புண் அடைந்து, ஒற்றைக் காலில் அரசியல் தவம் புரிந்த பிரம்ம ஞானி. இந்த யுத்த காலத்தில், சமாதானக்காவி அணிந்த பேரினவாதிகளால் கேணல்.சங்கர், கௌசல்யன் போன்ற பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்செல்வனின் இழப்போடு, சமாதானத்திற்கு தமிழ்மக்கள் கொடுத்த விலை மிகமிக அதிகம். இழப்புகளை உரமாக்கி, தடைகளை உடைத்தபடி, விடுதலை வானைத் தரிசிக்கப் புறப்படப் போகிறோமாவென்பதை தீர்மானிக்கும் காலம் அண்மித்துவிட்டது. பேச்சு வார்த்தையென்பது போராட்ட சக்தியை நீர்த்தும் போகச் செய்யுமென கற்பனை செய்வதால், தமிழ் மக்களின் இழப்புகள் குறித்து சிலருக்குக் கவலையில்லை. தமிழர் தரப்பு நியாயத்தை உலகமேடையில் வெளிப்படுத்திய அரசியல் துறைத்தலைவரை, கொன்றதனூடாக இனிப்பேச்சு வார்த்தை கிடையாதென்கிற முக்கிய செய்தியை, பேரின வாதம், தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் கூறியுள்ளதாகவே கருதவேண்டும். இந்த உலக சமாதானக் காவலர்கள் இனி எந்த முகத்தோடு எமைநோக்கி வரப்போகிறார்களோ தெரியவில்லை. அதாவது இனிவர முடியாதவாறு சிறீலங்கா ஆட்சியாளர்களே எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றனர். தமிழ் தேசிய தலைமைமீது சர்வதேச விரித்த வலைப்பின்னல்கள் யாவற்றையும் மகிந்தரே கிழித்தெறிந்து விட்டார். நாம் சமாதானத்தின் எதிரிகளல்லர் என்பதை சர்வதேசம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு இழுத்து வரவே யுத்தம் புரிவதாகவும், குண்டுகள் வீசுவதாம் கூறும் சிறீலங்காவின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. எழும்புமா? நிச்சயம் எழும்பாது. ஆகவே போராளியாக, நல்ல மனிதனாக, நேர்மையாளனாக விளங்கிய தமிழ்செல்வனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து, அவரின் இலட்சிய கனவினை நிஐமாக்குவதே எமது பணியாகும். இவன் காலத் தடம் பதியாத களங்கள் இல்லை. போர்க்களமாயினும், அரசியல் களமாகிலும் சிறப்புற இயங்கிய, தலைவனின் தளபதி இவன். விடுதலை பெறும் எம்தேசம் புன்னகை சிந்தும் போது , தமிழ் செல்வனின் முகம் அதில் தெரியும். -இதயச்சந்திரன் -

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.