[சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2007] கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் தொடர்ந்தும் சிறார் கடத்தல், படுகொலை மற்றும் கப்பம் அறவிடுதலில் ஈடுபட்டுவருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. செப்ரம்பர் 10-16 காலப் பகுதி சம்பவங்கள் தொடர்பான இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: கிழக்குப் பகுதியில் கருணா குழுவானது சிறார் கடத்தல்கள் உட்பட பல கடத்தல்களில் ஈடுபடுவது மிகவும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்ரெம்பர் 12 ஆம் நாள் திருகோணமலை அன்புவளிபுரத்தில் குண்டுவெடித்ததில் பதுங்கு குழி சேதமடைந்தது. சிறிலங்கா காவல்துறை அதிகாரி படுகாயமடைந்தார். செப்ரெம்பர் 13 ஆம் நாள் திருகோணமலையின் வடக்கில் 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உப்புவெளி சிறிலங்கா காவல்துறை நிலை மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மற்றொரு காவல்துறை அதிகாரி படுகாயமடைந்தார். செப்ரெம்பர் 13 ஆம் நாள் மட்டக்களப்பிலிருந்து 25 கிலோ மீற்றர் வடபகுதியில் உள்ள வாழைச்சேனையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த 27 வயது ஈ.பி.டி.பி. உறுப்பினர் கொல்லப்பட்டிருந்தார். இப்படுகொலைக்கு கருணா குழுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. செப்ரெம்பர் 15 ஆம் நாள் வாகரை பலாச்சேனையில் கருணா குழு அலுவலகப் பகுதியில் 26 வயது கருணா குழு உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கருணா குழுவினர் மூன்று 3 கடத்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 14 வயது முதல் 20 வயது வரையிலான 4 பேரை செப்ரெம்பர் 11 ஆம் நாள் கருணா குழு கடத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணா குழுவைச் சேர்ந்த காணாமல் 6 பேர் திரும்பி வரும் வரையில் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் அம்முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. செப்ரெம்பர் 13 ஆம் நாள் ஆயுதம் தாங்கிய வெள்ளை வான் குழுவினரால் ஒருவர் கடத்தப்பட்டு திருகோணமலையில் உள்ள கருணா குழு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அவர் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் கருணா குழுவினரின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகிறார். செப்ரெம்பர் 14 ஆம் நாள் 16 வயதுச் சிறுவனை அம்பாறையிலிருந்து தெற்குப் பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சின்னத்தோட்டம் பகுதியிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர். அந்த சிறுவனை தங்களது குழுவில் சேர்த்துக் கொண்டமையால் விடுவிக்க இயலாது என்றும் கருணா குழுவினர் தெரிவித்துள்ள்ளனர். செப்ரம்பர் 13 ஆம் நாள் திருகோணமலை தேவநகர்ப் பகுதியில் 14 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. செப்ரம்பர் 13 ஆம் நாள் மட்டக்களப்பு நகரில் ஆனைப்பந்தி பிள்ளையார் (இந்து) ஆலய வளாகத்தில் 15 முதல் 20 வரையிலான கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடியதனை அவதானிக்க முடியந்தது. உள்ளுர் வர்த்தகர்களிடம் கருணா குழு தொடர்ந்தும் கப்பம் அறவிட்டு வருகின்றனர். கருணா குழுவினரை உள்ளுர் அதிகாரிகளும் சிறிலங்கா காவல்துறையினரும் முழுமையாக பாதுகாத்து வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழர் ஜனநாயகக் கூட்டமைப்பை ஆதரிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த வாரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்தத் துண்டுப் பிரசுரங்களை கருணா குழு விநியோகித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. புளொட், டியூஎல்எஃப், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (பத்மநாபா) மற்றும் ஈ.பி.டி.பி.யினரை உள்ளடக்கியது அக்கூட்டமைப்பு. கருணா குழுவினர் ஜனநாயக விழுமியங்களை மதிப்பதில்லை என்று அக்கூட்டமைப்பினர் எதிர்பரப்புரை மேற்கொண்டனர். கிழக்குப் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், தனியார் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிளிநொச்சியின் வடக்குப் பகுதியில் வவுனியாவின் வடமேற்கில் இந்த வார காலப் பகுதி முழுமைக்கும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. செப்ரெம்பர் 12 ஆம் நாள் ஏ-14 வீதியூடாக முருங்கன் பகுதி மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. வடபகுதியில் இந்த வார காலப் பகுதி முழுமையும் தொடச்சியான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. செப்ரெம்பர் 11 ஆம் நாள் சிறிலங்கா வான்படையின் யுத்த வானூர்திகள் கிளிநொச்சியின் தென்கிழக்கு காட்டுப் பகுதியில் வான் தாக்குதலை நடத்தின. செப்ரம்பர் 13 ஆம் நாள் அளம்பில் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. செப்ரம்பர் 13 ஆம் நாள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை செப்ரம்பர் 10 மற்றும் செப்ரம்பர் 11 ஆகிய நாட்களில் மூழ்கடித்து விட்டதாகவும் இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் இருதரப்பு மோதல் நடைபெற்றதாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். செப்ரம்பர் 14 ஆம் நாள் யாழ். வடமராட்சி வடக்கில் பருத்தித்துறையில் கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவ பேரூந்து சிக்கியது. இதில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். வன்னி தெற்கு மற்றும் வடக்கு முன்னரங்க நிலைகளான மன்னார் மற்றும் கிளாலியில் இருதரப்பு மோதல்கள் நடைபெற்றன. பலர் காயமடைந்துள்ளனர். செம்ரம்பர் 10 ஆம் நாள் சளம்பைக்குளத்தில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 2 சிறிலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்தனர். செப்ரம்பர் 13 ஆம் நாள் மன்னாரில் சிறிலங்கா காவல்துறையின் பதுங்கு குழி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மின்மாற்றி தகர்க்கப்பட்டது. வடபகுதியில் இந்த வார காலப்பகுதியில் 4 படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. செப்ரம்பர் 8 ஆம் நாள் வீரபுரம் பகுதியில் தனது வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 34 வயது மதிக்கத்தக்க நபர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். செப்ரம்பர் 13 ஆம் நாள் 33 வயது நபர் அடையாளம் தெரியாத நபர்களால் பருத்தித்துறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். செப்ரம்பர் 15 ஆம் நாள் செட்டிக்குளம் வீரசேரியில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். செப்ரம்பர் 16 ஆம் நாள் அடையாளம் தெரியாத நபர்களால் யாழ். சுன்னாகம் நகரில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். செப்ரம்பர் 10 ஆம் நாள் 20 வயது முதல் 35 வயது வரையானோர் 7 ஆண்கள், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தினூடே பாதுகாப்புக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தனர். மன்னார் மாவட்டம் முருங்கன் மற்றும் நானாட்டனில் 3,500 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் பிரதேசத்தில் 232 குடும்பத்தில் இடம்பெயர்ந்துள்ளனர். வவுனியாவில் 2,000 பேர் புதிதாக இடப்பெயர்ந்துள்ளனர். வவுனியா மாவட்ட மொத்த இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கான 6 புதிய உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Saturday, September 22, 2007
கருணா குழுவினரின் தொடரும் சிறார் கடத்தல்- படுகொலை- கப்பம் அறவிடுதல்: கண்காணிப்புக் குழு
Saturday, September 22, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.