[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் அண்மைய போர்ப் பிரகடனத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "அரசியல் வழித் தீர்வை விட பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவ வலிமையை பயன்படுத்துவோம்" என்று அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கோத்தபாய கூறியிருந்தார். கோத்தபாயவின் இந்த போர்ப் பிரகடனம் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஹசன் அலி கூறியதாவது: இந்த அறிவிப்பு எம்மை கடுமையாகப் பாதித்துள்ளது. அமைதிப் பேச்சுக்களைத்தான் முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்துகிறது. மக்கள் போர் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கத்தக்க அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட வேண்டும். அமைதி இருக்கும் இடத்தில் பயங்கரவாதத்தால் உயிர்வாழ முடியாது. ஆனால் துன்பமான ஒரு வித அச்சநிலையில் மக்கள் வாழும் போது பயங்கரவாதம் உயிர்பெறும். ஆகையால் யுத்தத்தைவிட அரசியல் தீர்வுதான் தெரிவானது. கெரில்லா யுத்தத்துக்கு மரபு வழி இராணுவம் தேவையில்லை. ஒரே ஒரு நபரினால் பாரிய அழிவை ஏற்படுத்த முடியும். யுத்தம்தான் வாய்ப்பு எனில் பாரிய அழிவைத் தடுக்க இயலாது என்றார் அவர். மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஆர்.இராதாகிருஸ்ணன்: யுத்தத்துக்கு எதிரானவர்கள் நாங்கள். பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை நாம் வரவேற்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது சாத்தியமா இல்லையா என்பது எமக்குத் தெரியாது. இருப்பினும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அது நிரந்தர இராணுவ வெற்றி என்பது சாத்தியமில்லை. யுத்தத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும். யுத்தப் பாதையை அரசாங்கம் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன்: தமிழர் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்போம் என்று கூறுவது தொடர்பில் அவமானகரமாக அம்பலப்பட்டு நிற்கிறது சிறிலங்கா அரசாங்கம். யுத்த மனோபாவமுள்ள அரசாங்கம்தான் சிறிலங்கா அரசாங்கம் என்பதை இப்போதாவது அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். கோத்தபாயவின் அண்மைய அறிக்கையானது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உறுதியாக உள்ளதை நிரூபிக்கிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று தொடக்கத்திலிருந்தே நாம் கூறிவருகிறோம். அது ஒரு கண்துடைப்புத்தான். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது. யுத்தத்தை மீளவும் தொடங்கினால் 50 ஆண்டுகளுக்கு பின்னைய நிலைமைக்குத்தான் இட்டுச் செல்லும். ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அழிப்பதற்கான பாதையாகத்தான் அது அமையும் என்றார் அவர்.
Sunday, September 23, 2007
கோத்தபாயவின் போர்ப் பிரகடனத்துக்கு தமிழ்- முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்பு.!!
Sunday, September 23, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.