Wednesday, September 12, 2007

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை நிறுத்த சுவீடன் முடிவு.!!

[புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007]


எதிர்வரும் 2 தொடக்கம் 3 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சரிந்து போயுள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள சுவீடன் நாட்டுத் தூதரகத்தின் பிரதி தலைவர் கோரன் சில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த வருடம் பதவியேற்றுள்ள புதிய சுவீடன் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எமது அரசாங்கம், பாரிசில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நாடுகளின் அபிவிருத்திப் பணிகளை மீள் ஆய்வு செய்துள்ளது.

இதற்கு அமைய இருதரப்பு அபிவிருத்தி அமைப்பு, சுவீடன் அனைத்துலக அபிவிருத்தி கூட்டறவு அமைப்பு போன்றவை ஊடாக சுவீடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சிறிலங்காவில் நிறுத்தப்பட உள்ளன. சுவீடன் அனைத்துலக அபிவிருத்தி கூட்டுறவு அமைப்பு 70 நாடுகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

பாரிஸ் தீர்மானமானது சுவீடன் நாட்டிற்கும் ஏனைய பல நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடாகும். அதன் படி சில நாடுகளுக்கான அபிவிருத்திகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் இந்த தெரிவுகளில் என்ன நடைமுறைகளை பின்பற்றி உள்ளார்கள் என்பது தொடர்பாக என்னால் எதுவும் கூறமுடியாது.

எனினும் சிறிலங்கா இடைத்தர வருமானம் உள்ள நாடாக கருதப்பட்டுள்ளது. ஆனால் சுவீடன் வறிய நாடுகளையே அபிவிருத்தி உதவிகளுக்கு தெரிவு செய்துள்ளது. அவர்களின் இந்த தெரிவிற்கு இதுவே காரணியாகலாம் என நான் நம்புகின்றேன்.

எனவே 2009 ஆம் ஆண்டில் இருந்து சுவீடன் சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்த உள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுவீடன் தூதரகத்தின் பேச்சாளர் ஆர்பன் சோஸ்றோம் தெரிவித்துள்ளதாவது:

சுவீடன் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு சிறிலங்காவில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்திகளை பாதிக்காது. அது விரைவாக நடைபெறாது, நாம் நடைமுறையில் உள்ள எமது திட்டங்களுக்கு மதிப்பளிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் சுவீடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் மொத்த பெறுமதி 100 மில்லியன் குறோனர் (15 மில்லியன் டொலர்கள்) ஆகும். சுவீடன் அரசாங்கத்தின் உலக அபிவிருத்திக்கான வருடாந்த உதவித் தொகை 20 பில்லியன் குறோனர் (3 பில்லியன் டொலர்களாகும்) என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடன் அரசு, சிறிலங்காவிற்கு ஜனநாயக ஆட்சிமுறை, மனித உரிமை செயற்பாடுகள், வறியோருக்கான பொருளாதார அபிவிருத்தி, ஆய்வுகளுக்கான உதவி போன்ற வழிகளில் உதவி வருகின்றது.

இதனிடையே சுவீடனின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நடைவடிக்கையை பின்பற்றியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஜேர்மன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் சிறிலங்கா மீதான தமது ஆர்வத்தை குறைத்திருந்தன.

சிறிலங்காவிற்கான உதவிகளை ஜேர்மனி உறைநிலையில் வைத்ததுடன், டென்மார்க் கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது. அனைத்துலக சமூகத்தை ஆத்திரமூட்டும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், தவறான பொருளாதார முகாமைத்துவம், நல்லாட்சிக்கான ஈடுபாடுகள் அற்ற தன்மை என்பனவே இதற்கான காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.