Thursday, September 20, 2007

மத சுதந்திரம் மறுப்பு: சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

[வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2007]

சிறிலங்காவில் பௌத்த மதத்தினர் தவிர்த்த இதர மக்களினது மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க காங்கிரசில் அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பிலான 9 ஆவது ஆண்டறிக்கையை கடந்த வாரம் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் கொண்டலீசா றைஸ் தாக்கல் செய்தார்.

அதில் சிறிலங்கா தொடர்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்ச்சைக்குரிய மத மாற்றத் தடைச் சட்டத்தை 2004 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் விளைவாக மத சுதந்திரத்தைப் பாதுகாக்க அந்நாடு தவறிவிட்டது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் மற்றும் மத மாற்றத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அமெரிக்காவின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவரிடமும் பலமுறை இது தொடர்பில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விவாதித்துள்ளனர்.

ஒருவர் தான் விரும்பும் மத நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம் என்று வெளிப்படையாக சிறிலங்கா அரசாங்கம் கூறினாலும் சில பகுதிகளில் பிரச்சனை உள்ளது.

தேவாலயங்களையும் கோவில் வளாகங்களையும் விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 3 தசாப்தகாலமாக வெளிநாட்டு மத குருமார்களுக்கு வேலை அனுமதிப் பத்திரம் வழங்குவதை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

சிங்களப் பேரினவாதிகளால் கிறிஸ்தவர்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மை இஸ்லாமியர்களும் இத்தகைய இனப்பாகுபாட்டுக்கு முகம் கொடுக்கின்றனர். சித்திரவதைகளுக்குள்ளாகின்றனர். அவர்களின் வழிப்பாட்டுத் தலங்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.