Friday, September 14, 2007

முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்க மறுப்பு- உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார் பழ. நெடுமாறன்!

[வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2007] ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் கடந்த 2 நாட்களாக நடததப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி விடுத்த வேண்டுகோளை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் ஏற்க மறுத்துள்ளார். 3ஆம் நாளாக இன்றும் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு பழ. நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். 13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன். என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன். இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது. எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேஎன். தங்கள் அன்புள்ள பழ. நெடுமாறன். உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி உத்தியோகப்பூர்வமாக வேண்டுகோள் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பில் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி இன்று வெள்ளிக்கிழமை காலை முடிவை அறிவிப்பதாக பழ. நெடுமாஅறன் தெரிவித்திருந்தார். போராட்டக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை உண்ணாநிலைப் போராட்ட இடத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார். முதல்வர் கலைஞரின் வேண்டுகோள் சென்னையிலிருந்து நேற்று இரவு சேலம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் கருணாநிதி சென்னை தொடரூந்து நிலையத்தில் தனது கைப்பட பழ. நெடுமாறனுக்கு அனுப்பிய உத்தியோகப்பூர்வ கடிதம் பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் மு. கருணாநிதி. என்று முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதம் பற்றிய செய்தி திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயாலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஊடாக கவிஞர் காசி ஆனந்தனின் மூலமாக பழ. நெடுமாறனிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கலைஞரின் தனிப்பட்ட கடிதம் தமக்குத் தேவையில்லை என்றும் யாழ். தமிழ் மக்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதிக்கிறோம் என்ற இந்திய மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம்தான் தமக்குத் தேவை என்றும் பழ.நெடுமாறன் பதிலளித்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு பழ.நெடுமாறனை நேரில் சந்தித்துக் கொடுத்தனர். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.