Sunday, September 16, 2007

கருணாவை ஒடுக்க அழுத்தம் கொடுப்போம்: டக்ளஸ் எச்சரிக்கை.!!

[ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை ஒடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக மற்றொரு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு டக்ளஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: கருணா குழுவினரின் படுகொலைகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க உள்ளோம். எமது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் படுகொலை தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவர உள்ளோம். கருணா குழுவினரின் படுகொலைகள் தொடர்பாக திங்கட்கிழமை நடைபெற உள்ள பாதுகாப்புச் சபை கூட்டத்திலும் முறையிட உள்ளோம். போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து ஈ.பி.டி.பி. அதன் ஆயுதங்களை கையளித்துள்ளது. ஆயுதங்கள் அற்ற நிலையியேயே நாம் இயங்கி வருகின்றோம். எனவே ஒரு தரப்பை ஆயுதங்களுடன் நடமாட அனுமதித்து, எமது உறுப்பினர்களை கொல்வது நியாயமற்றது. இது தொடர்பாக கடுமையான நடைவடிக்கை எடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இது தொடர்பில் முதலில் பாதுகாப்புச் சபையில் முறையிட உள்ளபோதும், விரைவான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அரச தலைவர் மகிந்தவிடமும் நேரடியான கோரிக்கையை விடுக்க உள்ளேன் என்றார் அவர். சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களாக கருணா மற்றும் டக்ளஸ் குழுவினருக்கு இடையில் நடைபெற்று வரும் மோதல்களில் கடந்த வியாழக்கிழமை டக்ளசின் மூத்த உறுப்பினர் ஒருவர் வாழைச்சேனையில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.