Monday, September 17, 2007

நோர்வே தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதிகள் வெற்றி.!

[திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2007]

நோர்வேயின் மாநகர மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (10.09.07) நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் உறுப்பினர்கள் பலரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் 15 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஓஸ்லோ மாநகர சபை, ஒஸ்லோவுக்கு உட்பட்ட உள்ளூராட்சி சபைகள் மற்றும் ஒஸ்லோவை அடுத்துள்ள லோறன்ஸ்கூ நகரசபை, நோர்வேயின் வடமுனையில் அமைந்துள்ள துரொம்சோ நகரசபை மற்றும் நார்வீக் நகரசபை ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஓஸ்லோ மாநகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணத்தின் பெயர் தொழிற்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 44 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது. அவர் 2,123 விருப்பு வாக்குகளைப் பெற்று, 11 ஆவது இடத்திற்கு முன்னகர்த்தப்பட்டு மாநகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வே சமூக மற்றும் இணைவாக்க அமைச்சர் Bjarne Haakon Hansen மற்றும் அவரது ஆலோசகர் Hadja Tajik ஆகியோருடன் தமிழ் உறுப்பினர்கள்


ஹம்சாய்னி குணரட்ணம்

ஒஸ்லோ மாநகர சபையின் 59 மொத்த உறுப்பினர்களில் தொழிற்கட்சியின் 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோவின் உள்ளூராட்சி சபைகளான Grorud மற்றும் Stovner ஆகியவற்றில் போட்டியிட்ட துஸ்யந்தி கணேச்சந்திரா மற்றும் சுமதி விஜயராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். துஸ்யந்தி கணேச்சந்திரா தொழிற்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 6 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னகர்த்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சுமதி விஜயராஜ் வேட்பாளர் பட்டியலில் 10 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னகர்த்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தலைமை அமைச்சர் Jens Stoltenberg அவர்களின் அரசியல் ஆலோசகர் Mina Gerhardsen அவர்களுடன் தமிழ் உறுப்பினர்கள்


லோறன்கூ நகர முதல்வர் Aage Tovan அவர்களுடன் திலகவதி சண்முகநாதன்

ஒஸ்லோவை அடுத்துள்ள லோறன்ஸ்கூ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட திலகவதி சண்முகநாதன் 20 ஆவது இடத்திலிருந்து 7 ஆவது இடத்திற்கு முன்னகர்த்தப்பட்டு, நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த நகரசபையில் இம்முறையே முதன் முதலாக வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட இரண்டு பெண்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே முதன்முதலாக நகரசபை உறுப்பினராக வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்ணாக திலகவதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Grorud உள்ளூராட்சி சபையில் சோசலிச இடதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட புலேந்திரன் கனகரட்ணம், Stovner உள்ளுராட்சி சபையில் போட்டியிட்ட ஆதித்தன் குமாரசாமி ஆகியோரும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர்.


ஆதித்தன் குமாரசாமி


புலேந்திரன் கனகரத்தினம்

துரொம்சோ நகரசபையின் Red Alliance கட்சியின் வேட்பாளரான மரியா சிறிகரன் மற்றும் நார்வீக் நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட அன்பழகன் இரத்தினசிங்கம் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியதன் விளைவாகவே தமிழ் உறுப்பினர்களின் அரசியல் நுழைவு சாத்தியமாகியுள்ளது.

இந்நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்குச் சான்றாகவும் அமைந்துள்ளது என்று எமது நோர்வே செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.