Saturday, September 15, 2007

பழ.நெடுமாறனுக்கு அனைத்துலக தமிழீழ மாணவர் பேரவை கடிதம்.!!

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] சிங்கள தேசத்தின் வன்கொடுமைகளாலும், அனைத்துலகத்தின் புறக்கணிப்புக்களாலும் துயருற்றிருக்கும் தமிழீழ மக்களின் துயர்போக்க உங்களது உயிரினைப் பணயம் வைத்து நீங்கள் புரியும் அறப்போர் கண்டு எமது தேசம் நெஞ்சம் நிறைந்துள்ளது என்று சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறனுக்கு அனைத்துலக தமிழீழ மாணவர் பேரவை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எமது பசித்த வயிறுகள் நிறைந்து, துன்பங்கள் மறந்து புது உத்வேகத்துடன் எழுச்சிபெற்று நிற்கின்றோம் என தெரிவித்தது அனைத்துலக தமிழீழ மாணவர் பேரவை உண்ணா நோன்பிருக்கும் பழ. நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது விடுதலைப் போராட்டத்தில் இன்றுவரை நாம் களத்தில் விதைத்த உயிர்களின் எண்ணிக்கை 20,000 ஆகிறது. பல்லாயிரம் மக்களும் இனவாதத்தால் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள். சொந்த இனத்தின் குழந்தைகளையே பாலியல் தொழிலாளர்களாக்கி, சொந்த இனத்தின் தாய்மார்களையே விலை மாதர்களாக்கித் தமிழர்களைக் கொல்ல போர் புரியும் ஒரு இனவெறிக் கூட்டத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் நாம் படும் அவலங்கள் நீங்கள் இன்று நேற்று அறிந்தவைகளல்ல. பல்லாண்டு காலமாக எங்களது நினைவுகளுடனும், ஏக்கங்களுடனும் நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள் என்பதை நாமறிவோம். அரை நூற்றாண்டுகள் கடந்து நகரும் சிங்களத்தின் வன்கொடுமை வெறியாட்டம் இப்போது உச்சத்தாண்டவமாடுவதைக் கண்டு உங்களால் பொறுக்க முடியாமை ஆச்சரியத்திற்குரியதல்ல. உண்மையில் இங்கு ஒவ்வொரு நாளும் தமிழர்கள் வெளித்தெரியாது இனவாதத்தால் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் கால்நடைகளைக் கூடச் சிங்கள உடைமைகளாக்குமளவிற்கு இப்போது இங்கு நிலைமை சென்றுவிட்டது. இருந்தபோதும் நாங்கள் போராடுகின்றோம். எமது பலத்தின் மூலம் எமக்கு விடிவுவரும் என நம்புகின்றோம். எம்மைத் துன்பக் கடலிலிருந்து கரைசேர்த்து வாழவைக்க உழைக்கும் தலைவன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றோம். இந்த நிலையில் நீங்களும் உங்களைப் போன்ற உணர்வாளர்களும் தமிழகத்தை அணிதிரட்டிக்கொண்டு எம்மை ஆரத்தழுவத் துடிப்பது எம்மிடையே மேலும் புது நம்பிக்கையைத் தந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.