Saturday, September 15, 2007

பழ.நெடுமாறன் போன்றோரின் தமிழகக் குரலை இந்தியா நசுக்குவது ஏன்?: "உதயன்" தலையங்கம் விளக்கம்.!

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] ஈழத்தமிழர்களுக்காக எழும் குரலை தமிழகத்தில் நசுக்கும் முயற்சி ஏன்? என்ற தலைப்பில் இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ள "உதயன்" நாளிதழின் தலையங்கம்: இலங்கையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உணர்வும் உயிருமாகக் குரல் எழுப்பி வரும் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற னின் போராட்டம் தமிழக அரசுக்கு மட்டுமல்ல இந்திய மத்திய அரசுக்கும் தலையிடி கொடுக்கும் விவகாரமாக மாறிவருகிறது. 1980 90களில் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட பட்டறிவோடுஇ சற்று ஒதுங்கி நின்று நோட்டமிடும் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த புதுடில்லிஇ இப்போதுதான் மீண்டும் தனது தென்முனை அயல் நாட்டில் வலுவாகத் தலைநீட்டும் இராஜதந்திரத்தை மெல்ல முன் னெடுக்க முயல்கின்றது. மீண்டும் "வெண்ணெய் திரண்டு வரும் சமயம் தாழியை உடைத்த' கதைபோன்றுஇ அயல் வல்லாதிக்கம் தனது அதிகாரச் செல்வாக்கை இலங்கைக்குள் திரும்பவும் செலுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டும்போது அதைத் திசைதிருப்புமாற் போல நெடுமாறன் போன்றோர் குழப்புகின்றார் என்றே புதுடில்லி சிந்திக்கத் தலைப்படுகின்றது. - இலங்கையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக அரசின் செயலாளர் லலித் வீரதுங்கஇ ஜனாதிபதியின் சகோதரர்களான அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் புதுடில்லி சென்று அங்குள்ள அதிகாரத் தலைமையோடு "குசுகுசு' பேச்சு நடத்தியமை - அதையடுத்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இந்தியத் தரப்பு புதுடில்லிக்கு அழைத்து பேச்சுகளில் ஈடுபடுகின்றமை - அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உட்பட ஏனைய எதிரணிப் பிரமுகர்களையும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப் புப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச புதுடில்லி தீர்மானித் திருப்பதாக வந்துள்ள தகவல்கள் - ஆழ்கடலில் இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 200 கிலோமீற்றருக்கு அப்பால் சர்வ தேசக் கடற்பரப்பில் வைத்து மூன்று சரக்குக் கப்பல்களை புலிகளினுடையவை என இனம் கண்டு அங்கு வைத்துத் தாக்கி அழிக்கும் தகைமையையும் திறமையையும் பெற்றுக்கொண்டு அதை இலங்கைக் கடற்படையால் ஒப்பேற்ற முடிந்தமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் இலங்கை விவகாரத்தில் இந்தியத் தரப்பின் தலையீடு எவ்வளவு தூரம் முற்றி வருகின்றது என்பதை ஊகித்தறிவது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான விடயமல்ல. இன்னமும் பத்து நாட்களுக்குள் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ அங்கு வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தனியாகச் சந்திக்கிறார். அப்போது இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது அரசு மனம் கொண்டிருக்கும் உத்தேசத் தீர்வுத் திட்டத்தின் நகல் பிரதி ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமரிடம் நேரில் எழுத்தில் கையளிப்பார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. அதாவது அரசின் தீர்வுத்திட்ட யோசனையை அரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு வெளியிட முன்னர் அயல் வல்லாதிக்கத் தலைவரிடம் காட்டி அங்கீகாரம் பெறுவது போன்ற நிலைமை வரை இவ்விவகாரம் செல்லக் கூடிய தோற்றப்பாடுகள் தென்படு கின்றன. இவ்வளவு தூரத்துக்கு இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு ஊடுருவிப் பலமடைந்து வருகையில் அதை பழ.நெடுமாறன் போன்றோரின் போராட்டங்கள் பலவீனப்படுத்தி விடும் எனப் புதுடில்லி கருதுவதில் அர்த்தங்கள் நிறையவே உள்ளன. பழ.நெடுமாறன் யாருக்காகக் குரல் எழுப்புகின்றார்? ஈழத் தமிழர்களுக்காக. இந்த ஈழத் தமிழர்களின் தேசிய தலைமைத்துவம் யாரிடம் இருக்கின்றது? தமிழீழ விடுதலைப் புலிகளிடம் உள்ளது. ஆனால் புலிகள் மீது தங்கள் அதிகாரம் மூலம் வல்லாதிக்கப் பலம் வாயிலாக செல்வாக்குச் செலுத்தவே முடியாது என்பது புதுடில்லிக்குப் பட்டறிவுப் பாடமாக பட்டவர்த்தனமாகத் தெரியும். ஆகவே - அத்தரப்புக்காக அந்தப் பக்கத்தில் உள்ள நீதிக்காக செயற்பட்டு தனக்கு எதுவும் இலாபம் ஈட்டிக்கொள்ளவே முடியாது என்பதும் - விடயங்களைத் தனக்கு வசதியாகத் திருப்பி மாற்றி புரட்டிப் போட்டு நெறிப்படுத்துவதற்கு புலிகள் தரப்பு ஒத்துவராது என்பதும் புதுடில்லிக்கு நன்றாகவே புரியும். எனவேதான் அது மற்றப் பக்கத்தின் ஊடாக தான் செல் வாக்குச் செலுத்திஇ அழுத்தம் போட்டு தனது வழிக்குக் கொண்டு வரக்கூடிய கொழும்பு மூலமாக காய்களை நகர்த்த எத்தனிக் கின்றது. அந்த முயற்சிக்கு மறுபுறத்தில் முட்டுக்கட்டை போடுகின்ற மாதிரி- புலிகள் பக்கத்திலும் தமிழர் பக்கத்திலும் உள்ள நீதி- நியாயங்களை நெடுமாறன் போன்றோர் பூதாகரப்படுத்தி அம்பலப்படுத்துவது புதுடில்லிக்கு வேம்பாய்க் கசக்கின்றது. ஏற்கனவே அமெரிக்காவுடனான அணுசக்தி தொடர்பான 1.2.3. ஒப்பந்தம் காரணமாகத் தனது கூட்டணியின் இடதுசாரிக் கட்சிகளைப் பகைத்துக்கொண்டு இந்திய மத்திய அரசின் ஆட்சிப்பீடம்- நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு அல்லாடிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சமயத்தில் ஈழத்தமிழர் விடங்களைப் பழ.நெடுமாறன் ஊதிப் பெருப்பித்துத் தூண்ட அதற்கு எடுபட்டு ஆளும் தரப்பின் கூட்டில் உள்ள தென்னிந்தியத் திராவிட அமைப்புகள் மற்றும் தென்னிந்தியக் கட்சிகள் கிளர்ந்தெழுந்தால் ஆட்சியில் நீடிப்பது சாத்தியமற்றது என்பதும் புதுடில்லி ஆட்சியாளர் தரப்பின் கணிப்பு. இவை காரணமாகவே நியாயத்துக்காகப் போராடும் பழ. நெடுமாறன் போன்றோரின் இந்தப் போராட்ட முயற்சியை முளையிலேயே கிள்ளிவிட புதுடில்லி விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவில் கிளர்ந்தெழும் தரப்புகளைப் பகிரங்கமாக அடக்கி அதைக் கொழும்புக்குக் காட்டுவதன்மூலம் கொழும்பை வழிக்குக் கொண்டு வரும் தனது எத்தனத்தை இன்னும் வலுப்படுத்தலாம் என்று புதுடில்லி கணக்குப் போடுவதிலும் தவறில்லை. இந்தப் பின்னணிகளிலேயே பழ. நெடுமாறன் போன்ற ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் குரல் இந்தியாவில் இன்று நசுக்கப்படுகின்றது என்று அத்தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.