[சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2007] தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமை தொடர்பில் அனைத்துலக சமூகமானது முதன்மையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலமாக தற்போதைய அழிவுப் போக்கினை இனியும் தொடர முடியாது என்பதை சிறிலங்காவுக்கு உணர வைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்கான குழு இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆம் ஆண்டு கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உரையாற்ற உள்ளதாக ஊடகங்களினூடே அறிந்தோம். தமிழ்த் தேசியத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான மோதலை பயங்கரவாதமாக சித்தரிக்க இத்தகைய சந்தர்ப்பங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கீழ்க்கண்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கிறது. - இந்தத் தீவில் 2,500 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு - கிழக்கில் தங்களது சொந்த மொழி, கலாசார அடையாளங்களுடன் ஒரு தேசியமாக வாழ்ந்து வருகின்றனர். - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய தாயகமாகும். சிறிலங்கா விடுதலைக்கு முன்னதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி பேசும் சிங்கள மக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்தனர். - தமிழ் மக்கள் தங்களது வரலாற்று ரீதியான வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர். 1956 ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். தமிழ் மக்களினது அனைத்துவகைச் செயற்பாடுகளுமே வன்முறையற்ற அமைதி வழி நடவடிக்கைகளாகும். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலம் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக மறுத்தது. சுயநிர்ணய உரிமைக்கு நேர்மாறாக தமிழ் மக்களின் ஒப்புதலின்றி ஒற்றையாட்சி அரசு முறை உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான இனரீதியான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 3 தசாப்தகாலமாக தமிழர் தலைமைப்பீடம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையிலிருந்து தமிழர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் தங்களது சுயநிர்ணய உரிமைக்காகவும் ஆயுதம் தாங்கிய போராட்டம் உருவானது. தமிழ் மக்களின் இந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்து வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் சிறிதும் விட்டுக்கொடுக்காத போக்கினால் தற்போதும் இந்தப் போராடம் தொடருகிறது. அரச தலைவராக மகிந்த பொறுப்பேற்ற பின்னரான நிகழ்வுகள் சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமானது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டமையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய மிக மோசமான செயலாகும். வான்வழித் தாக்குதல்கள், பல்குழல் உந்துகணைகள் உள்ளிட்டவைகளினூடே செறிவான எறிகணை வீச்சுகள் என இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்தாலும் தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகள், பொதுக் கட்டிடங்கள், விவசாய நிலங்கள், வாழ்வாதாரங்கள், தோட்டங்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சொத்துடைமைகள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை குடிசார் நிர்வாகத்தினர் கொண்டு செல்வதை சிறிலங்கா இராணுவம் தடுத்தது உணவை யுத்த ஆயுதமாக சிறிலங்கா இராணுவம் பயன்படுத்துகிறது. அந்தப் பகுதிகளுக்கு அனைத்துலகம் மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் செல்வது தடுக்கப்பட்டது. வெளிப்படையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் நீதிக்குப் புறம்பாக 3,900 வரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 700-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் "காணாமல்" போயிருப்பதாக நம்பப்படுகிறது. சிறிலங்கா இராணுவமானது 99 விழுக்காடு சிங்களவர்களைக் கொண்டது. சிறிலங்கா காவல்துறையானது 95 விழுக்காடு சிங்களவர்களைக் கொண்டது. ஆகையால் தமிழ் மக்களுக்கு எதிரான மோதலை இராணுவமும் காவல்துறையும் பகிரங்கமாக மேற்கொள்கிறது. சிறிலங்கா இராணுவத்தினது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்துள்ளனர். 20 ஆயிரம் தமிழர்கள் கடல் கடந்து தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டனர். ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. முன்னைய வன்முறைகளால் இடம்பெயர்ந்த 3 இலட்சம் தமிழர்களும் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அண்மையில் மீள்குடியேற்ற நடவடிக்கையை அவசர கோலத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால் அந்த மக்களுக்கு உரிய வீடுகளும் வாழ்வாதாரங்களும் விவசாய மற்றும் மீன்பிடி கருவிகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் எதுவித நட்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்படவும் இல்லை. அண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களின் பாரிய வாழ்விடப் பிரதேசத்தை அதிஉயர் பாதுகாப்பு வலமயமாகப் பிரகடனம் செய்து இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது பாரம்பரியமான வரலாற்று வாழ்விடங்களில் மீள்குடியேற இயலாத வகையில் தடுத்துள்ளது. தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டுகாலமாக வசித்து வந்த தங்கள் சொந்த நிலத்தில் தமிழர்கள் வாழ்வதற்குரிய அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு சமமானது. பேச்சுக்கள் மூலம் அரசியல் தீர்வு காண்பதில் ஈடுபாட்டுடன் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டதற்கு அப்பால் கடந்த 18 மாதகாலமாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்த ஒரு அரசியல் தீர்வையுமே சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கவிலை. சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் என்பது அரை நூற்றாண்டுகாலத்துக்கு பிந்தைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு தெளிவான அரசியல் பார்வை இல்லை. எந்த ஒரு பரிந்துரையையும் அது முன்வைக்கவில்லை. அனைத்துலகத்தை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் அனைத்துக் கட்சி அரசியல் குழு. மேலும் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் உருவாக்கப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தமானது வடக்கு - கிழக்கு மாகாணங்களானவை தமிழ் பேசும் மக்களினது வரலாற்றுத் தாயகம் என்பதை அங்கீகரித்து இரண்டு மாகாணங்களையும் ஒரே அலகின் கீழ் இணைத்தது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 18 ஆண்டுகாலமாக வடக்கு-கிழக்கு இணைப்பை அனைத்து சிறிலங்கா அரசாங்கங்களும் அங்கீகரித்து வந்தன. ஆனால் சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டது. இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனி நிர்வாக அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு அமைதிப் பேச்சுக்களையும் இனியும் தொடர்ந்து முன்னெடுக்க இயலாத வகையில் முட்டுக்கட்டை உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக நடைமுறைகளையோ தரத்தையோ உறுதி செய்யாது என்பது நாம் வலிமையாக முன்வைத்துள்ளோம். தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமை தொடர்பில் அனைத்துலக சமூகமானது முதன்மையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலமாக தற்போதைய அழிவுப் போக்கினை இனியும் தொடர முடியாது என்பதை சிறிலங்காவுக்கு உணர வைக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Saturday, September 22, 2007
தமிழர் சுயநிர்ணய உரிமைக்கான நடவடிக்கைகளை அனைத்துலகம் மேற்கொள்ள வேண்டும்: த.தே.கூ.
Saturday, September 22, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.