Tuesday, September 18, 2007

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலகத்தை அமைக்க வலியுறுத்தல்.!!

[செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2007] சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய அலுவலகம் அமைக்கப்படும் நிலையில்தான் முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இத்தகைய வெளிக்கள அலுவலகத்தை அமைப்பதன் மூலம் நடுநிலையோடு கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்ய இயலும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் என்று அழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் கருதுகின்றன. "இது தொடர்பிலான சிறிலங்காவின் நிர்வாக அமைப்புக்கள் செயற்படாமையினால் வெளித்தரப்பு ஒன்றினது நிர்வாக அமைப்பு முறை அவசியமாகிறது. இதனை சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று ஜெனீவா ஊடகவியலாளர் மாநாட்டில் சிறிலங்காவின் உரிமைகள் அமைப்பான இன்போர்ம் நிறைவேற்று இயக்குநர் சுனில அபேயசேகர கூறியுள்ளார். "தற்போதைய நிலையில் கடத்தல்கள் தொடர்பில் குறிப்பாக இனப்பிரச்சினை பகுதிகளில் தகவல்களை அறிவது கடினமாக உள்ளது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் சாரு ஹொக் கூறியுள்ளார். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் வடபகுதியில் மட்டும் 550-க்கும் அதிகமான நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் 350-க்கும் அதிகமான காணாமல் போதல்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்றோ உயிருடன் அல்லது இறந்தவர்கள் எத்தனை பேர் என்றோ தெளிவான விவரக்குறிப்புக்கள் எதுவும் இல்லை. யார் குற்றவாளிகள் என்பது தொடர்பான விவரங்களும் இல்லை" என்றார் சாரு ஹொக். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் லூயிஸ் ஆர்பௌரின் இலங்கை பயணத்தின் போது ஐ.நா.வின் மனித உரிமைகள் விசாரணை அலுவலகம் தொடர்பில் பேசுமாறு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தகைய விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்ட பின்னர் நேபாளத்தில் கணிசமான அளவு காணாமல் போதல்கள் குறைந்துள்ளன என்று சுனில அபேயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. அமைப்பின் பிரதிநிதிகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் களநிலைமையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.