Sunday, September 16, 2007

தாய்லாந்திலிருந்து வெறுங்கையுடன் திரும்பிய சிறிலங்கா குழு.!

[ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறிலங்காவிற்கு கொண்டுவரப் போவதாகவும் கூறிக்கொண்டு தாய்லாந்து சென்ற சிறிலங்காவின் அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளதாவது: தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட பீற்றர் இப்ராகீம் என்ற நபரை பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொங் போஸ்ற், ஏசியன் றிபூன், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஆகியன செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இந்த செய்தி ஊடகங்கள் பீற்றர் இப்ராகீம் என்ற பெயரை தமது செய்திகளில் தவிர்த்திருந்தன. இதனைத் தொடர்ந்து தாம் பத்மநாதனை கைது செய்யவில்லை என தாய்லாந்து அதிகாரிகள் மறுத்திருந்தனர். எனினும் பத்மநாதனை விசாரிக்கவும், முடிந்தால் சிறிலங்காவிற்கு கொண்டுவரவும் என சிறிலங்கா காவல்துறையை சேர்ந்த இரு மூத்த உதவி காவல்துறை ஆணையாளர்களும், மேலதிக வெளிவிவகாரச் செயலாளரும் தாய்லாந்து சென்றிருந்தனர். எனினும் இவர்களின் வருகையை தாய்லாந்து அரசாங்கம் ஊக்குவிக்காத போதும் அவர்கள் தாய்லாந்துக்கு தாமாகவே சென்றிருந்தனர். தற்போது அங்கு எந்தவித முன்னேற்றமும் அற்ற நிலையில் அதிகாரிகள் குழு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவிற்கு திரும்பியுள்ளனர். தாய்லாந்து அதிகாரிகள் தமது நிலையில் உறுதியாகவே உள்ளதாக நாடு திரும்பிய சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தாய்லாந்தில் உள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகத்தை விட விடுதலைப் புலிகளுக்கு தாய்லாந்து அதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உள்ளதாக சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.