Saturday, September 15, 2007

பழ.நெடுமாறனின் உண்ணாநிலைப் போராட்டம் நிறுத்தம்,!!

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007]


தமிழ்நாடு முதல்வர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அளித்த உறுதிமொழிகளை ஏற்று தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் நிறுத்தியுள்ளார்.

யாழ். தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் ஒருநாளும் சென்னையில் 3 நாட்களுமாக தொடர்ந்து உண்ணாநிலையைக் கடைபிடித்து வந்த பழ.நெடுமாறனை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று சனிக்கிழமை நேரில் சந்தித்தார்.

பழ.நெடுமாறனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர் இராமதாஸ் "நாடித்துடிப்பு இனியும் குறைந்தால் நாங்கள் உங்களை இழந்துவிடுவோம். அதனால் உண்ணாநிலையைக் கைவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.

ஆனால் பழ. நெடுமாறன், யாழ்ப்பாண மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடே இந்திய அரசு அனுப்பி வைக்க அனுமதி அளித்தால்தான் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுவேன் என்று மறுத்தார்.

"உங்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வர் கலைஞரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தான் உறுதியாக இருப்பதாக கலைஞர் என்னிடம் உறுதியளித்தார். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உணவு மற்றும் மருந்துப் பொருட்களை யாழ். மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நானும் உறுதி தருகிறேன். அப்படி அனுப்பி வைக்கவில்லை எனில் நாம் இணைந்தே போராடுவோம். இதற்கும் மேல் நாடித்துடிப்பு குறைந்து உங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இழக்கவும் மாட்டோம். உங்களது பணி தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் தேவை. அதனால் உண்ணாநிலையை கைவிடுங்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் தனது போராட்டத்தை பழ.நெடுமாறன் கைவிட மறுத்தார்.

மருத்துவர் இராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர் பாரதிராஜா, பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான் உள்ளிட்ட அங்கு திரண்டிருந்த தமிழின உணர்வாளர்கள் அனைவரும் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் இராமதாஸ் பழச்சாறு கொடுக்க அதனைப் பருகி தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் முடித்துக்கொண்டார்.

அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் பழ.நெடுமாறன் உண்ணாநிலையை முடித்துக்கொண்ட செய்தியை மருத்துவர் இராமதாஸ் அறிவித்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பழ. நெடுமாறன் கூறியதாவது:

யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் 5 லட்சம் தமிழ் மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம். 7 மாத காலமாக இந்திய அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்துத்தான் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினேன்.

அனேகமாக தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் ஆதரவளித்தனர். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 4 நாட்கள் உடனிருந்து பேராதரவு தந்தார். மற்ற கட்சித் தலைவர்களும் பேராதரவைத் தந்தனர்.

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் முதலமைச்சரிடம் இது பற்றி பேசியிருக்கிறார். அபோது இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் முதலமைச்சர் கூறியிருக்கிறார். முதலமைச்சரின் வாக்குறுதியை தானும் நிறைவேற்றுவதாக இராமதாஸ் மீண்டும் கூறினார். அந்த உறுதிமொழியை ஏற்றும் போராட்டக் குழுவின் முடிவின்படியும் உண்ணாநிலையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இலங்கைக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதற்குரிய முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்வார் என்றும் நம்புகிறேன் என்றார்.

ஊடகவியலாளர்களிடம் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடி வதங்கி இடைவிடாத சிங்கள இராணுவத் தாக்குதல்களால் மருந்து கிடைக்காமல் நோயால் மடிந்தும் வருகின்றனர்.

தமிழீழத் தமிழர்களைக் காப்பதற்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் திரட்டிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் இந்திய அரசு அதற்கு அனுமதி தரவில்லை.

எங்கும் நடக்காத அக்கிரமமாக மன்மோகன்சிங் அரசு- தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டது.

செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மருந்துப் பொருட்களை அனுப்பி 7 மாதங்களாக அனுமதி தரவில்லை.

அதற்கிடையில்தான் தந்திகள்- உண்ணாநிலை- என எத்தனை எத்தனை போராட்டங்களை நெடுமாறன் நடத்திவிட்டார். அதன் பிறகுதான் உலகத் தமிழர்களுக்கு உண்மையை உணர்த்துவதற்காக அறவழிப் பயணத்தை நெடுமாறன் மெற்கொண்டார். அதனைக் காவல்துறை கொச்சைப்படுத்த முயன்றது. சென்னையில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்திலும் காவல்துறையினர் அராஜகத்தின் மூலம் அதனைத் தடுக்க நினைத்தனர்.

இப்போது 7 மாத காலமாக அனுப்பாத மத்திய மன்மோகன்சிங் அரசின் துரோகம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

உடல்நிலை பாதிக்கப்படும் நிலையிலும் கூட குறிப்பாக இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார். அவருடைய உயிர் இன்னும் எத்தனையோ காலத்துக்கு உயிர்வாழ வேண்டும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது. குறிப்பாக ஈழத்திலே போர் மேகம் சூழ்ந்ந்துள்ள இன்றைய நிலைமையில் அவர் இன்னமும் வாழ வேண்டும். நீண்ட காலம் வாழவேண்டும்.

2 ஆம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படைகள் இருந்த இடத்தில் கூட செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இப்போது அனுப்பப்படும் உணவு விடுதலைப் புலிகளுக்கு அல்ல. பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்குத்தான்.

இந்த விடயத்தில் மத்திய அரசு செய்த துரோகத்துக்கு உடந்தையாக இருப்பவர்கள்- தமிழகத்தில் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப விரைவில் அனுமதி கிடைக்கும் என்றார் வைகோ.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.