Saturday, September 15, 2007

4 ஆம் நாளாக பழ.நெடுமாறன் உண்ணாநிலையைத் தொடர்கிறார்.!

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] யாழ். தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடே அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 4 ஆம் நாளாக இன்று சனிக்கிழமையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் 74 வயது பெரியவர் பழ.நெடுமாறன் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். நாகப்பட்டினத்தில் கடந்த 12 ஆம் நாள் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கினார். அதன்பின்னர் சென்னையில் 13 ஆம் நாள் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். 4 ஆம் நாளாக இன்றும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடர்ந்து வருகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்றும் நெடுமாறனை சந்தித்து அங்கேயே இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் ராஜாராம், புதிய பார்வை இதழின் ஆசிரியர் ம.நடராசன், சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் பழ.நெடுமாறனை இன்று சந்தித்தனர். ஈழத் தமிழர்களும் பொதுமக்களும் தொடர்ந்து நெடுமாறனை சந்தித்து வருகின்றனர். உடல்நிலை பழ.நெடுமாறனை மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர். பழ.நெடுமாறனுக்கு இரத்த அழுத்தம் சிறிது இறங்கியுள்ளது. சர்க்கரையில் அளவு அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் உலகத் தமிழ் அமைப்புகளும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பழ. நெடுமாறன் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நல்லகண்ணு, சுப.வீ. உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அனுப்பியிருந்த கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் பழ.நெடுமாறனிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசிமுடிவை அறிவிப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முற்பகல் போராட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர உள்ளதாகவும் தமிழக முதல்வர் சென்னை திரும்பியதும் அவருடன் பேச்சுக்கள் நடாத்த அணியமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தி.மு.கவின் கயல்தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் திருமாவளவன், இயக்குநர் வேலுபிரபாகரன், லட்சிய தி.மு.க. வின் தலைவரான நடிகர் விஜய ராஜேந்தர் உள்ளிட்ட பலர் பழ.நெடுமாறனை நேற்று வெள்ளிகிழமை நேரில் சந்தித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.