[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைத் தமிழினத்தின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு. பழ.நெடுமாறன் அவர்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் கைது மக்களின் துன்ப துயரங்கள் தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது எமது மக்கள் மத்தியில் உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. முதிய வயதிலும், தளர்வற்ற உடல் நிலையிலும் எமது மக்களின் விடிவுக்காக தயாராது உழைத்து வரும் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்வதனால், அவரது உடல்நிலை பாரதூரமாகப் பாதிக்கப்பட்டு, மோசமான விளைவு ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையும், அச்சமும் எமது மக்களிடம் இருந்து வெளிப்படுத்தப்படும் நிலையில், திரு.பழ.நெடுமாறன் அவர்களின் பணி எமது மக்களுக்கு மேலும் தேவை என்பதையும், அவரது உடல்நிலை எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதை எமது மக்கள் தாங்கிக்கொள்வது மிகக் கடினமானது என்பதையும் கருத்திற்கொண்டு, எமது மக்களின் பாசத்தோடு கூடிய வேண்டுகோளாக உண்ணாவிரதத்தை தயவுகூர்ந்து கைவிடுமாறு அவரைப் பணிவோடும் அன்போடும் கேட்டுக்கொள்கின்றோம். உணர்வுபூர்வமானதும், உருக்கமானதுமான எமது மக்களின் வேண்டுகோளுக்கு அவர் உரிய மதிப்பளிப்பார் என்று எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, September 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.